மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்; பாமகவின் மக்கள் பணி தொடரும் - டாக்டர் ராமதாஸ்


மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறோம்; பாமகவின் மக்கள் பணி தொடரும் - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 2 May 2021 8:24 PM GMT (Updated: 2 May 2021 8:24 PM GMT)

தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் சோர்வளிக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,

சென்னை,

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

''தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாமகவுக்கும், அக்கட்சி இடம் பெற்றிருந்த அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளித்தாலும் சோர்வளிக்கவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மக்களின் தீர்ப்பை பாமக முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தோல்வியடைந்ததற்கான காரணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றைச் சரி செய்யவும், அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும். பாமக கடந்த காலங்களைப் போன்று ஆக்கபூர்வமான கட்சியாக மக்கள் பணியைத் தொடரும்.

பாமக போட்டியிட்ட தொகுதிகளில் பாமக மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அளித்த உழைப்பும், ஒத்துழைப்பும் இணையற்றவை. இத்தேர்தலில் அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணியாற்றிய அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story