நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வெற்றி
நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனை தோற்கடித்து பா.ஜ.க. வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றார். இதனால் அவர் 75 வயதில் சட்டசபைக்குள் முதன்முறையாக நுழைகிறார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக சுரேஷ்ராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக எம்.ஆர்.காந்தி களமிறங்கினார். தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான சுரேஷ்ராஜன், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராகவும் இருந்தவர்.
மேலும் எம்.ஆர்.காந்தி பா.ஜ.க. மூத்த தலைவராகவும் இருப்பதால் நாகர்கோவில் தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக கருதப்பட்டது. இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.
தொடக்க சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜன் முன்னணியில் இருந்தார். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் சுரேஷ்ராஜனை விட அதிக வாக்குகளை பெற்று முன்னணிக்கு வந்த எம்.ஆர்.காந்தி இறுதியில் வெற்றி கனியை பறித்து விட்டார். 11,669 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனை தோற்கடித்தார்.
இதன் மூலம் முதன்முறையாக எம்.ஆர்.காந்தி சட்டசபைக்குள் நுழைகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் எம்.ஆர்.காந்தியும் ஒருவர்.
இவர் கடந்த 1980, 89 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியிலும், 1984, 2006-ம் ஆண்டு குளச்சல் தொகுதியிலும், 2011-ம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 6 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.ஆர்.காந்தி, 7-வது முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.வேலாயுதம் என்பவர் குமரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 ஆண்டுகளுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. பிரதிநிதியாக எம்.ஆர்.காந்தி சட்டசபைக்குள் செல்கிறார். அவருக்கு வயது 75. திருமணமாகவில்லை.
Related Tags :
Next Story