மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெற்றி
மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார்.
மதுரை,
மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் சின்னம்மாள், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பாலசந்திரன், முனியசாமி (மக்கள் நீதி மய்யம்), வெற்றிக்குமரன்(நாம் தமிழர் கட்சி) உள்பட 15 பேர் போட்டியிட்டனர். அதில் தொடக்கம் முதலே அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலை பெற்று இருந்தார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தது.
இருப்பினும் ஒவ்வொரு சுற்று முடிவிலும் செல்லூர் ராஜூ முன்னிலை பெற்று வந்தார். மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 30-வது சுற்று முடிவில் செல்லூர் ராஜூ 80 ஆயிரத்து 57 வாக்குகள் பெற்றார். சின்னம்மாள் 71 ஆயிரத்து 95 வாக்குகளும், பாலசந்திரன் 3 ஆயிரத்து 247 வாக்குகளும், முனியசாமி 15 ஆயிரத்து 183 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 17 ஆயிரத்து 410 வாக்குகளும் பெற்று இருந்தனர்.
31-வது சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூ 83,883 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் 74,762 வாக்குகளும் பெற்றனர். இதனால் செல்லூர் ராஜூ 10 ஆயிரத்து 123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெற்றி பெற்று இருந்தார். தற்போது அவர் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story