'களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்’ - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கமல்ஹாசன் தலைமையில் தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.
இதற்கிடையில், தேர்தலில் சந்தித்த தோல்விக்கான காரணம் குறித்து கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அடுத்தடுத்த ராஜினாமா நடவடிக்கைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
உயிரே உறவே தமிழே,
பத்திரமாக இருக்கிறீர்களா?
’சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். ‘துரோகிகளை களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர். ஆர். மகேந்திரன்.
கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதராணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ள துணிந்தார்.
கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களுக்கும் திறமை இல்லாதவர்களுக்கும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு ‘அனுதாபம்’ தேட முயற்சிக்கிறார்.
தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களை போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.
என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர, சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளரவேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.
தோல்வியின் போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை.
மண் மொழி மக்கள் காக்க களத்தில் நிற்போம்' என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story