ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது - டொனால்டு டிரம்ப் பேட்டி


ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது - டொனால்டு டிரம்ப் பேட்டி
x
தினத்தந்தி 8 Jan 2020 5:02 PM GMT (Updated: 8 Jan 2020 5:02 PM GMT)

ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  

இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள  அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளம்  மீது  மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.  ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,  ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காசிம் சுலைமானி  பயங்கரவாதி போல் செயல்பட்டு வந்ததால் அவர் கொல்லப்பட்டார். ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. 

அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது.  அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.

நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம். ஈரான் தனது அணு ஆயுத கனவை கைவிட வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும்.

உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கா விரும்புகிறது. உள்நாட்டில் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை.

ஈரான் பயங்கரவாத நடவடிக்கையை கைவிடாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவாது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கு தேவையில்லை.  உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story