கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடி நோயாளி அதிர்ச்சி


கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடி நோயாளி அதிர்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2020 3:38 AM GMT (Updated: 2 Jun 2020 3:38 AM GMT)

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்த ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது.

இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர்.இந்த நிலையில் குணம் அடைந்து குடியிருப்பு திரும்பிய பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனை சிகிச்சைக்கான பில்லை அனுப்பியுள்ளனர்.

அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்தது சேர்க்கப்படவில்லை.ஆனால் அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்கான கட்டணமும் சேர்த்து 1.5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11.33 கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது

நல்ல வேளையாக அவர் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இதனால் அவர் தப்பித்து இருக்கிறார்.இருப்பினும், அந்த மருத்துவமனை கட்டணத்தை பார்க்கும் போது உண்மையில் ஒருவகை அச்சமாகவே இருந்தது என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Next Story