அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: நோயாளிகளால் நிரம்பும் அமெரிக்க மருத்துவமனைகள் -எச்சரிக்கை
அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
வாஷிங்டன்
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்திலும் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.
கொரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.
நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் 61,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் நேற்று ஒருநாளில் 890 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,58,731-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 134,853 ஆக உள்ளது.
கொரோனா முதல் பாதிப்பு ஜனவரி 21 அன்று வந்தது. 99 நாட்களுக்குள், 10 லட்சம் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டனர்.
43 நாட்களுக்குள் 20 லட்சம் பாதிப்புகளாக அதிகரித்தது. மேலும் 28 நாட்களுக்குப் பிறகு, நேற்று புதன்கிழமை, கொரோனா வைரஸ் பாதிப்பு 30 லட்சத்தை அடைந்தது.
குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அஸ்டின் நகர மேயர் ஸ்டிவ் அல்டர் கூறும்போது, நாம் இதில் மாறுதல் கொண்டுவரவில்லை என்றால் அடுத்த இரு வாரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கட்கிழமை முதல் புதன் வரை உணவகங்களில் இருந்து உணவருந்தும் அனைவரின் 50 சதவிகித கட்டணத்தை அரசே ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story