ஸ்பெயின்: கடலில் கலந்த எரிமலை குழம்பு


ஸ்பெயின்: கடலில் கலந்த எரிமலை குழம்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 12:01 AM GMT (Updated: 1 Oct 2021 12:37 AM GMT)

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் வெளியேறிய எரிமலை குழம்பு 9 நாட்களுக்கு பின்னர் கடலில் கலந்தது.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுக்கூட்டங்களில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் கடந்த 19-ம் தேதி திடீரென சீற்றம் ஏற்பட்டது. கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது.

எரிமலை குழம்பு மக்கள் வசித்து வந்த குடியிருப்பு பகுதிகளையும் எட்டியது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

எரிமலை சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதாலும், எரிமலை குழம்பு தொடர்ந்து வெளியேறி வருவதாலும் அப்பகுதியில் ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,  ஹம்ரி விஜா எரிமலை குழம்பு வெளியேறி வந்த பாதையில் இருந்த சுமார் 600 வீடுகளில் தீக்கிரையாகியது. மேலும், எரிமலை குழம்பு 258 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ளது.

இந்நிலையில், மலையில் இருந்து வழிந்தோடிய எரிமலை குழம்பு 9 நாட்களுக்கு பின்னர் நேற்று கடலில் கலந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது. 

Next Story