மத்திய குழு இன்று தமிழகம் வருகை; 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு


மத்திய குழு இன்று தமிழகம் வருகை; 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2021 12:23 AM GMT (Updated: 21 Nov 2021 12:23 AM GMT)

கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் வருகிறது.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்யும் இந்த குழு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வருகிற 24-ந்தேதி ஆலோசனை நடத்துகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கொட்டி தீர்த்த கனமழை

தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை நகர், புறநகர் பகுதிகள், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

மழை ஓய்ந்தும் தண்ணீர் வடியாத நிலை உள்ளது. இதேபோல கன்னியாகுமரி, நெல்லை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின.

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த குழு ஆய்வு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது. பின்னர் இந்த அறிக்கை டி.ஆர்.பாலு எம்.பி. மூலமாக தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் நேரில் கொடுக்கப்பட்டது.

மத்திய குழு

அந்த மனுவில், தமிழக வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 79 கோடியும், உடனடியாக ரூ.550 கோடியும் விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. மேலும் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதி அளித்திருந்தார்.

இதனையடுத்து உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில், மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்செய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இன்று தமிழகம் வருகை

மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு தமிழகம் வருகிறது.

அப்போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்த குழு நேரில் பார்வையிடும்.

அமைச்சர் பேட்டி

மத்திய குழு தமிழகம் வருவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

11 மாவட்டங்களில் ஆய்வு

வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று இன்று பிற்பகலில் தமிழகம் வருகிறது.

ராஜீவ் சர்மா தலைமையில் மொத்தம் 7 அதிகாரிகள் கொண்ட இந்த குழு தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட உள்ளது. இந்த குழு இன்று சென்னை வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் முதலில் கலந்தாலோசிக்கும்.

பின்னர் நாளையும், நாளை மறுநாளும் (23-ந் தேதி) 2 குழுக்களாக பிரிந்து சென்று பாதிக்கப்பட்ட எல்லா மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் ஒரு குழுவும், கன்னியாகுமரியில் ஒரு குழுவும் நாளை ஆய்வு செய்ய உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒரு குழுவும், வேலூர், ராணிப்பேட்டையில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்கிறது. மொத்தம் 11 மாவட்டங்களில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்கிறது.

வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து வழிநடத்தி செல்வார்கள்.

மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை

பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றிய விவரங்களை குறிப்பு எடுத்து மத்திய குழுவை அழைத்து செல்லுமாறும், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். மத்திய குழு வரும்போது, கட்சி வேறுபாடின்றி விவசாய சங்கங்கள், அனைத்து கட்சியினரும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு மழை பாதிப்பு குறித்தும் தெரிவிக்க வேண்டும். ஆய்வு முடிந்தவுடன் வருகிற 24-ந் தேதியன்று மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.

தமிழகத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.549 கோடியே 63 லட்சமும், முழுமையான நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 629 கோடியே 29 லட்சமும் விடுவிக்க கோரப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் புதிதாக வந்துகொண்டு இருக்கிறது. இதையும் சேர்த்து கூடுதலாக நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு அழுத்தம் கொடுத்து நிவாரணம் பெறுவோம்.

சான்றிதழ்கள்

கனமழை காரணமாக மாணவர்களின் பள்ளி சான்றிதழ்கள், வீட்டின் பத்திரங்கள் உள்பட ஆவணங்கள் சேதம் அடைந்துள்ள, தொலைந்த விவகாரத்தில் மாற்று ஏற்பாடு செய்யப்படும். மழைக்கால நிவாரணம் உடனடியாக வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்தும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அதிக தடுப்பணைகளை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு திறம்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் உயிரிழப்புகள், சேதங்கள் குறைவு. சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் இந்த வருடம் முழுமையான கவனம் செலுத்தப்பட்டது. மழையை தாண்டியும், ஆற்றில் வெள்ளம் சென்றதால் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் தொகை, நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.

‌இவ்வாறு அவர் கூறினார்.


Next Story