உஸ்பெகிஸ்தானில் அரசுக்‌கு எதிரான போராட்டத்தில் வன்முறை


உஸ்பெகிஸ்தானில் அரசுக்‌கு எதிரான போராட்டத்தில் வன்முறை
x

உஸ்பெகிஸ்தானில் அரசுக்‌கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்து 18 பேர் பலியாயினர்.

தாஷ்கண்ட்,

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள 'கரகல்பக்ஸ்தான்' பிராந்தியம், தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் பாலைவன பகுதிகளை கொண்ட இந்த பிராந்தியத்தில் வெறும் 20 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

இந்த நிலையில் கரகல்பக்ஸ்தான் பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்யும் வகையில் நாட்டின் அரசியலைமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ந்தேதி கரகல்பக்ஸ்தான் பிராந்தியத்தின் தலைநகர் நுகஸ் உள்பட பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதை தொடர்ந்து அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் ஷவ்கத், போராட்டத்தை ஒடுக்க அங்கு ராணுவத்தை களமிறக்கினார். இது கரகல்பக்ஸ்தான் பிராந்திய மக்களிடம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் நுகஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 18 பேர் பலியாயினர். 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக கரகல்பக்ஸ்தான் பிராந்தியம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.


Next Story