ஜப்பானில் ஓடுபாதையில் விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு


ஜப்பானில் ஓடுபாதையில் விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு
x

ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானங்கள் மோதல்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக் விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. தாய் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே ஓடுபாதையில் ஈவா ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நின்றது. 250 பயணிகளுடன் தைவானுக்கு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்த நிலையில் இந்த விமானத்தின் மீது தாய்லாந்து விமானம் மோதியது.

ஓடுபாதை மூடப்பட்டது

இதில் தாய் ஏர்வேஸ் விமானத்தில் இறக்கை உடைந்து கீழே விழுந்தது. இதனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டு ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப குழுவினர் அங்கு விரைந்து சென்று விமானத்தில் வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து விபத்து நடந்த அந்த ஓடுபாதை மூடப்பட்டது. பின்னர் அந்த ஓடுபாதையில் சிதறி கிடந்த விமானத்தின் பாகங்களை விமான நிலைய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதன் பிறகே அந்த ஓடுபாதை திறக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விமானங்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story