அமெரிக்காவில் விசா முறைகேடு இந்தியர்கள் 3 பேர் கைது

எச்1 பி விசாக்களை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்தியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாஷிங்டன்
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த, தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷோர் தட்டாபுரம், குமார் அஸ்வபதி மற்றும் சந்தோஷ் கிரி ஆகிய 3 பேர் கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டா கிளாரா நகரில் ‘கன்சல்டன்சி’ நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.
இவர்கள் 3 பேரும் கலிபோர்னியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் காலி பணியிடங்கள் இருப்பதாக பொய் கூறி, வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் இருந்து பணிவிண்ணப்பத்தை பெற்று அதன் மூலம் எச்1 பி விசாக்களை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். எனினும் விசாரணைக்கு பின் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அடுத்த மாதம் (மே) 13-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 36 ஆயிரம்) அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story






