இலங்கையில் முக்கிய தலைவர்களுக்கு அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை


இலங்கையில் முக்கிய தலைவர்களுக்கு அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 May 2019 10:36 AM GMT (Updated: 1 May 2019 10:36 AM GMT)

இலங்கையில் முக்கிய தலைவர்களுக்கு அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி 8 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதில் 253 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை தமிழ்வழி கல்வி ஆசிரியர், பள்ளி முதல்வர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இருப்பினும், உள்நாட்டை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. அந்த இயக்கத்தை தடை செய்துள்ளது.

இலங்கையில்  பல மத ஸ்தலங்களில் பெண்களை பயன்படுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்தது.  இதற்காக தயார் நிலையிலிருந்த ஆடைகளை, சாய்ந்த மருது பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து, நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய தடை செய்யப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 8 முக்கிய தலைவர்களுக்கு அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இன்னும் சில வாரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என கிடைத்த தகவலை அடுத்து, இந்த தலைவர்கள் ஒன்றாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று கிறிஸ்தவ ஆலயங்கள், கோவில்கள் மற்றும் பிற மதவழிபாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவற்றை தவிர்க்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.  அவர்கள் எந்த பகுதிக்கும் செல்ல வேண்டுமெனில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அதேவேளையில், மேற்கத்திய முன்னேற்ற துறை மந்திரி படளி சம்பிகா ரணவாகா, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து மத போதனைகளில் ஈடுபடும் வெளிநாட்டை சேர்ந்த 800 இஸ்லாமிய மதபோதகர்களை உடனடியாக திருப்பி அனுப்பும்படி இலங்கை அரசை கேட்டு கொண்டுள்ளார்.

Next Story