ஹாங்காங்கில் 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு காரணமான மசோதா கைவிடப்பட்டது


ஹாங்காங்கில் 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு காரணமான மசோதா கைவிடப்பட்டது
x
தினத்தந்தி 4 Sep 2019 7:27 AM GMT (Updated: 4 Sep 2019 7:27 AM GMT)

ஹாங்காங்கில் 2 மாததிற்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு காரணமான கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதா கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாங்காங்,

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அங்கு போராட்டங்கள் வெடித்தன.

இந்த போராட்டங்கள் ஹாங்காங்கை உலுக்கியதை தொடர்ந்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.

எனினும் மசோதாவை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன.

ஜனநாயக ஆர்வலர்கள் முன்னெடுத்த இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சீனா தனது ராணுவத்தை பயன்படுத்தி ஹாங்காங் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது. இதற்காக ஹாங்காங் எல்லையில் சீனா ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

இதற்கிடையில், ஹாங்காங்குக்கு சர்வதேச ஓட்டுரிமை மறுக்கப்பட்டதின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது.

தடையை மீறி இந்த பேரணி நடந்ததால், போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

ஹாங்காங்கின் பல்வேறு நகரங்களிலும் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக ஹாங்காங் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. 

இந்த நிலையில், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய  ஒப்படைப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக ஹாங்காங் தலைவர் அறிவித்து உள்ளதாக அங்குள்ள  ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

Next Story