அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்


அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:40 PM GMT (Updated: 2019-12-12T04:10:19+05:30)

அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்களை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நிவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் சில புறாக்கள் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டன. அவற்றின் தலையில் வித்தியாசமாக ஏதோ இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் புறாக்களின் அருகில் சென்று உற்று கவனித்தனர். அப்போது புறாக்களின் தலையில் சிறிய அளவிலான தொப்பிகள் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து தொப்பியுடன் இருந்த புறாக்களை அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை உடனடியாக இணையத்தில் வைரலாகின. புறாக்கள் தொப்பிகளுடன் அழகாக காணப்பட்டாலும், இது அவற்றை துன்பப்படுத்தும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

புறாக்களை மீட்டு பராமரிக்கும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் இது பற்றி கூறுகையில், “புறாக்களின் தலையில் தொப்பி எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் என தெரியவில்லை. ஒருவேளை பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் அப்போது அவை துன்புறுத்தப்பட்டிருக்க கூடும். எனவே இந்த வேலையை செய்தது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார். மேலும் இதே போன்ற புறாக்கள் எங்கு தென்பட்டாலும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

Next Story