சோமாலியாவில் நாடாளுமன்றம் அருகே கார் குண்டு வெடிப்பு 4 பேர் பலி


சோமாலியாவில் நாடாளுமன்றம் அருகே கார் குண்டு வெடிப்பு 4 பேர் பலி
x
தினத்தந்தி 8 Jan 2020 10:00 PM GMT (Updated: 8 Jan 2020 7:51 PM GMT)

சோமாலியாவில் அல் சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

மொகாதீசு, 

சோமாலியாவில் அல் சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் தலைநகர் மொகாதீசுவில் நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை சோதனை சாவடி அருகே நிறுத்தி வெடிக்க செய்தார்.

பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு அல் சபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 28-ந்தேதி மொகாதீசுவில் உள்ள முக்கிய சாலையில் அல் சபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு வெடிப்பில் 81 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Next Story