இத்தாலியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: வீடுகளுக்குள்ளேயே இருக்க அரசு உத்தரவு

இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
ரோம்,
அந்த வகையில் இத்தாலியில் நேற்று முன்தினம் மட்டும் 97 பேர் கொரோனாவால் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இத்தாலி அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி நாட்டில் முதன் முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, லம்பார்டி பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்களுக்கு ஏற்கனவே ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன.
அங்குள்ள 1 கோடியே 60 லட்சம் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணங்கள் மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து, வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருமணங்கள், இறுதி சடங்குகள், மதவழிபாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுபோன்ற கடுமையான தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டு அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் விரிவுப்படுத்தி உள்ளது.
அதாவாது நாடு முழுவதிலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கவும், அரசு அனுமதி இல்லாமல் பயணங்கள் மேற்கொள்ள கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் கியூசெப் கோண்டே கூறுகையில், ’நாம் அனைவரும் இத்தாலியின் நன்மைக்காக எதையாவது விட்டுக்கொடுக்க வேண்டும். அதை நாம் இப்போது செய்ய வேண்டும்‘ என்றார்.
மேலும் அவர், ’அனைத்து குடிமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வலுவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகி உள்ளது‘ என கூறினார்.
இத்தாலி முழுவதும் ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாறும் என்று கூறிய அவர் மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை முற்றிலும் தவிர்த்து, வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் கால்பந்து போட்டிகள் உள்பட அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 3-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
இதற்கிடையில் அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக சிறைகளில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்க்க தடைவிதிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கைதிகளின் உறவினர்கள் சிறைகளுக்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலை பயன்படுத்தி சிறைகளில் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். நேற்று முன்தினம் நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் நடந்த கலவரத்தில் 7 கைதிகள் பலியாகினர்.
Related Tags :
Next Story