ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல்- அமெரிக்கா எதிர்ப்பு


ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல்- அமெரிக்கா எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 July 2020 8:03 AM IST (Updated: 1 July 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல் வழங்கியது.

பீஜிங்,

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் கடந்த 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது.

ஆனாலும் ஹாங்காங்அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல்,போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் குறித்துவிசாரணை மேற்கொள்ளுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தப் போராட்டம் பல மாதங்கள் தொடர்ந்தது. இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

அதனை தொடர்ந்து, ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது.

மேலும் எதிர்காலத்தில் இது போல சீன எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்க சீனா முடிவு செய்தது.

அதன்படி ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என சீனா அறிவித்து. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 22ந் தேதி சீன நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சீனாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனம் தெரிவித்த ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு எம்பிக்கள் இது ‘ஒரு நாடு 2 அமைப்புகள்‘ நடைமுறையை அழிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினர்.

அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா நேற்று ஒப்புதல் அளித்தது.

சீனாவின் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்ததாக சீன ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஹாங்காங் பிரதிநிதி டாம் யுவு சூங் கூறுகையில் “இந்த புதிய சட்டம் பிரச்சினையை தூண்டுவதை தடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக ஹாங்காங்கை பயன்படுத்த வேண்டாம்“ எனக் கூறினார்.

இதற்கிடையில் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளித்ததை கண்டித்து ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவின் புதிய சட்டத்திற்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுதந்திரத்தை விரும்பும் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Next Story