அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைப்பு


அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 20 Sep 2020 1:39 AM GMT (Updated: 20 Sep 2020 1:53 AM GMT)

அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு
இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகமும், அந்த நாட்டின் மூத்த எம்.பி.க்கள் பலரும் வரவேற்றனர். அது மட்டுமின்றி அமெரிக்காவிலும் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன.

அதனைத் தொடர்ந்து சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 6-ந் தேதி கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.இதற்கிடையில் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத்துறை வெளியிட்டு இருந்தது.  அதாவது எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தகத்துறை  கூறியது. 

இந்த நிலையில், முக்கிய திருப்பமாக டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ஆராக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக் டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராக்கிள் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதனால், அமெரிக்காவில் தடையில் இருந்து டிக் டாக் தப்பிக்கும் எனத்தெரிகிறது.


Next Story