பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்


பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்
x
தினத்தந்தி 1 Nov 2020 7:58 AM IST (Updated: 1 Nov 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி 44 வயது நபர் திருமணம் செய்த அவலம் நடந்துள்ளது.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வருபவர் அலி அசார் (வயது 44).  இவர் அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு பிறந்த சிறுமியின் பள்ளி ஆவண பதிவிலும், சர்ச்சில் உள்ள ரெஜிஸ்டரிலும் அர்ஜூவின் வயது 13 என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.  ஆனால், வயது உள்பட அனைத்து ஆவணங்களும் மாற்றப்பட்டு உள்ளன.  சிறுமி 18 வயது நிரம்பியவர் என்றும், மதமாற்றத்திற்கும், திருமணத்திற்கும் விருப்பம் தெரிவித்து உள்ளார் என்றும் காட்டப்பட்டு உள்ளது.

சிறுமி காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  ஆனால், அதே காவல் நிலையத்திற்கு, சிறுமி இஸ்லாம் மதத்திற்கு மாறி, கடத்தப்பட்டவருடன் திருமணம் செய்து கொண்டார் என்ற கொடுமையான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக மதரசா ஜமியா இஸ்லாமியாவில் மதமாற்ற சான்றிதழும், அர்ஜூ பாத்திமா என்ற புதிய பெயருடன் திருமண சான்றிதழும் கொண்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.  நீதிமன்ற வளாகத்தில் வைத்து தனது தாய் ரீட்டாவை சிறுமி சந்திக்க விடாமல் அலி அசார் தடுத்து விட்டார்.

எனினும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபொழுது, அர்ஜூ ராஜா சுய முடிவு எடுப்பதற்கு போதிய வயதுடையவராக இருக்கிறார் என நீதிபதி தீர்ப்பளித்து உள்ளார்.

அந்நாட்டில் சிறுபான்மையோராக இருக்கும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நடக்கும் அராஜகங்களை பற்றி மனித உரிமை அமைப்புகளோ அல்லது அரசியல்வாதிகளோ பேச கூட முன்வரவில்லை.  பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றங்களில் கூட நீதி கிடைக்கவில்லை என லண்டனை அடிப்படையாக கொண்ட, பாகிஸ்தானின் சிறுபான்மையோருக்கான நீதி அமைப்புக்கான செய்தி தொடர்பு நிர்வாகி அனிலா குல்சார் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

அந்நாட்டில் பிரதமர் இம்ரான் கான், இந்து சிறுமிகளின் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் ஆகியவை தடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன.

கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானின் ஹசன் அப்துல் சிட்டியில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவரான பிரீத்தம் சிங் என்பவரது மகள் புல்பால் கவுர் (வயது 17) திடீரென காணாமல் போனார்.

இதுபற்றி டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியிடம் அவர் புகார் தெரிவித்து உள்ளார்.  இந்த விவகாரம் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

தனது மகள் மதமாற்றம் செய்யப்பட்டு இருக்க கூடும் என பிரீத்தம் அச்சம் தெரிவித்திருந்த நிலையில், சீக்கிய கமிட்டியானது, அந்த இளம்பெண் கடத்தப்பட்டு உள்ளார் என்றும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு அவர் மதமாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

கடந்த 9 மாதங்களில் இதுபோன்று 55க்கும் மேற்பட்ட சீக்கிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அந்த கமிட்டி அதிர்ச்சி தகவலை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, சீக்கிய பெண்கள் மதமாற்றம் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரகம் முன் சீக்கியர்கள் பலர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த விவகாரம் ஐ.நா.வுக்கு கொண்டு செல்லப்படும் என டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவர் எம்.எஸ். சிர்சா கூறினார்.  ஆனால் அதன்பின்னரும் பாகிஸ்தானில் தொடர்ச்சியாக இதுபோன்ற சிறுபான்மை சமூக சிறுமிகள், இளம்பெண்கள் கடத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் துணிச்சலாக நடந்து வருகின்றன.
1 More update

Next Story