வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிக்கு ரான் கிளைன் தேர்வு - ஜோ பைடன் நடவடிக்கை


வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிக்கு ரான் கிளைன் தேர்வு - ஜோ பைடன் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Nov 2020 4:46 AM IST (Updated: 13 Nov 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய 77 வயது ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் ஜனவரி மாதம் 20-ந்தேதி அந்த நாட்டின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

ஆட்சி மாற்றத்துக்கான ஆயத்த நடவடிக்கைகளில் அவரும், அவரது குழுவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமான வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். வெள்ளை மாளிகை நிர்வாகம், ரான் கிளைன் வசம் வரும். வெள்ளை மாளிகையின் மிக முக்கிய பதவி இது. ஜனாதிபதியின் அன்றாட செயல்பாடுகளை நிர்வாகம் செய்வார். வெள்ளை மாளிகையில் இவரது கவனத்துக்கு வராமல் ஒரு துரும்பு கூட அசைய முடியாது.

இவர் ஜோ பைடனின் மூத்த உதவியாளர் ஆவார். 1980-களில் இருந்து ஜோ பைடனிடம் இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளராகவும், துணை ஜனாதிபதி அல் கோரின் பணியாளர் குழு தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

ரான் கிளைன் பற்றி ஜோ பைடன் குறிப்பிடுகையில், “அவருக்கு ஆழ்ந்த, மாறுபட்ட அனுபவம் உண்டு. அரசியல் அரங்கில் அனைத்து தரப்பினருடனும் பணியாற்றும் திறனும் இருக்கிறது” என கூறினார். தனது தேர்வு பற்றி ரான் கிளைன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story