துபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு


துபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு
x
தினத்தந்தி 30 Jan 2021 12:48 PM GMT (Updated: 30 Jan 2021 12:48 PM GMT)

கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது.

துபாய்,

துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க திருச்சபையை தற்போது சுகாதார முன்னெச்சரிக்கைகளுடன் மீண்டும் திறக்க சமூக மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் தேவாலயம் மீண்டும் பொதுமக்கள் பிரார்த்தனைக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அந்த தேவாலய திருச்சபையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், நாளை மறுதினம் முதல் தினசரி காலை 6.30 மணி மற்றும் 7 மணி ஆகிய 2 நேரங்களில் மட்டும் கூட்டு பிரார்த்தனை நடைபெறும் என்றும் மற்ற நேரங்களில் தேவாலயம் மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து உள்ளே வரவேண்டும் எனவும் தேவாலயத்தினுள் சமூக இடைவெளியுடன் கையுறைகளையும் அணிந்து அமர வேண்டும் எனவும் திருச்சபை அறிவுறுத்தியுள்ளது.

Next Story