22,400 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 5000 ஆண்டுகள் பழமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு


22,400 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 5000 ஆண்டுகள்  பழமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2021 2:20 PM GMT (Updated: 15 Feb 2021 2:20 PM GMT)

22,400 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட 5000 ஆண்டுகள் பழமையான பீர் தொழிற்சாலை எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெய்ரோ

கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எகிப்தின் சுற்றுலாத் துறை. அதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாகப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழைமையான சின்னங்களைக் காட்சிப்படுத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2019 - ம் ஆண்டில் ஒரு கோடியே முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் எகிப்துக்கு வந்த நிலையில், 2020 ம் ஆண்டு முப்பத்தைந்து லட்சம் பேர் மட்டுமே வருகை தந்தனர்.

எகிப்தின் பண்டைய நகரம் அபிடோஸ். எகிப்தில் காணப்படும் தொல்பொருள் தளங்களில் மிகவும் முக்கியமானதாகும். அல் - பால்யானா நகருக்கு அருகில் நைல் நதிக்கு மேற்கே அமைந்துள்ளது, அபிடோஸ். எகிப்தின் ஆரம்ப கால அரசர்களின் முக்கிய நகரமாகவும், எகிப்திய கடவுள் ஒசிரிஸ் வழிபாட்டிற்கான யாத்திரை மையமாகவும் இருந்தது. ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அபிடோஸ் நகரம் பிற்காலத்தில் புகழ் மங்கி, பாலை மணலால் மூடப்பட்டது.நர்மர் மன்னர் முதல் வம்சத்தை நிறுவி 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்தார். அவர் மேல் மற்றும் கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்தார்.

1970 களின் பிற்பகுதிகளில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்ற போது தான் இங்கு, கி.மு 2900 க்கு முன் வாழ்ந்த எகிப்திய அரசர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு, தொல்லியல் ரீதியாக இந்தப் பகுதி புகழ் பெற்றது.

இந்த நிலையில் தான் சுமார் 5000 ஆண்டுகள் பழைமையான, ஆயிரக்கணக்கான லிட்டர் பீர் உற்பத்தி செய்யக்கூடிய மதுபானக் ஆலையை எகிப்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு கண்டு பிடித்து உள்ளது.  கி.மு 3100 வாக்கில் அரசர் நர்மன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

20 மீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமும் கொண்ட பீர் தொழிற்சாலை, சுமார் 22,400 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்டது. ஒவ்வொன்றும் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 40 களிமண் பானைகளைக் கொண்டுள்ளது.இந்த அரிய கண்டுபிடிப்பைக் அகழாய்வு செய்து கண்டுபிடித்துள்ள பேராசிரியர்  மாத்தீவ் ஆடம்ஸ், ”எகிப்தின் ஆரம்பகால மன்னர்களுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளின் போது பீர் பயன்படுத்தப்பட்டது என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மதுபானம் இருப்பதை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் கண்டுபிடித்தனர், ஆனால் அவர்கள் அதன் துல்லியமான இடத்தை கண்டறியவில்லை

பண்டைய எகிப்து சமுதாயத்தில் பீர் ஒரு முக்கிய அங்கமாகும். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பீர் குடித்துள்ளனர். குறிப்பாக, ஏழை மக்களின் பிரதான பானமாகவும் செல்வந்தர்களின் உணவாகவும் பீர் இருந்துள்ளது. தெய்வங்களுக்கும் பீரை பிரசாதமாக படையலிட்டு வணங்கினர். தொழிலாளர்கள் தங்கள் ஊதியமாக ஒரு நாளைக்கு மூன்று முறை பீர் பெற்றனர். இந்த சூழலில் தான் பீர் தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 பண்டைய எகிப்தின் ஒரு முக்கிய தொல்பொருள் இடங்களில் 5,000 ஆண்டுகள் பழமையான மதுபானத்தை கண்டுபிடித்தது. நைல் ஆற்றின் மேற்கே பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால புதைகுழியான அபிடோஸில் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பழங்கால கவுன்சிலின் பொதுச் செயலாளர் மொஸ்டபா வஜீரி தெரிவித்தார்.

Next Story