அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து: இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதல் ஈரான் குற்றச்சாட்டு


அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து: இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதல் ஈரான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 April 2021 6:28 AM GMT (Updated: 12 April 2021 6:28 AM GMT)

ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல் இதுவென ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெஹ்ரான்

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியாக  டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.

மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில், 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இந்த நிலையில் ஜோ பிடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை கட்டி வருகிறது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இருப்பினும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளுக்கு கட்டுப்படாமல்  யுரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட ஐ.ஆர்.6 ரக மையவிலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது‌.இந்த நிலையில் நேற்று நாதன்ஸ் நகரின் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த வெடி விபத்தால் ஆலையில் மின் வினியோகம் தடைபட்டது.இருப்பினும், இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறியுள்ளார்.

மேலும் ஆலையில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெஹ்ரூஸ் கமல்வெண்டி கூறியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளிடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது.இந்த நிலையில், நாதன்ஸ் விபத்துக்கு இஸ்ரேல் சைபர் தாக்குதலே காரணம் எனவும், இது அணு பயங்கரவாத நடவடிக்கை எனவும் ஈரான் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த ஆலையில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர தீ விபத்து நேரிட்டதும்,இதில் பல லட்சம் மதிப்புள்ள நவீன எந்திரங்கள் எரிந்து நாசமானதும், இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என ஈரான் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையத்தை நாசப்படுத்தும் வேலை முன்னெடுக்கப்பட்டதாக நாட்டின் முக்கிய அணுசக்தி அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி அமைப்பின்  செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் அணுசக்தி நிலையத்தின் மின் வலையமைப்பை உள்ளடக்கிய செயல்திறன்களை நாசப்படுத்தும் வேலைகள் நிகழ்ந்ததாகக் கூறினார். 

ஈரானின் அணுசக்தி அமைப்பின்  தலைவர் அலி அக்பர் சலேஹி வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவத்தை நாசவேலை மற்றும் அணு பயங்கரவாதம் என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது இந்த இழிவான நடவடிக்கையை ஈரான் கண்டிக்கிறது.  இந்த அணு பயங்கரவாதத்தை சமாளிக்க சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆகியவற்றின் அவசியத்தை ஈரான் வலியுறுத்துகிறது.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை ஈரானுக்கு உள்ளது. எவ்வாறாயினும், இஸ்ரேலிய பொது ஊடகங்கள் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இது இஸ்ரேலிய இணைய தாக்குதலின் விளைவு என்று கூறி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Next Story