சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்


சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
x
தினத்தந்தி 18 Jun 2021 8:37 AM GMT (Updated: 18 Jun 2021 8:37 AM GMT)

சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவும் பாகிஸ்தான் சரிக்கட்டி வருகிறது.

இஸ்லாமாபாத்:

கொரோனா பேரிடரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிவருகிறது. எனினும், சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.

சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவே பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது. 

உலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது.   3 வது நாடாக பாகிஸ்தான் உள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் , எருமைகளின் எண்ணிக்கை 12 லட்சமாக  அதிகரித்துள்ளது. ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில்  இருந்து 3.5 கோடியாக  உயர்ந்துள்ளது. செம்மறி ஆடு இனப்பெருக்க எண்ணிக்கை ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. இப்போதைய நிலையில், பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் உள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு பெரிய காரணம் உள்ளது.

லாகூரில் 2020-2021 நிதியாண்டில் மட்டும் கழுதை மக்கள் தொகை 41,000 அதிகரித்துள்ளது. செம்மறி ஆடுகள் ஒரு வருடத்தில் 400,000 அதிகரித்துள்ளன.

ஒரு கழுதையின் விலை  ரூ .35,000 முதல் ரூ .55,000 வரை இருக்கும். ஒரு கழுதை ஒரு நாளைக்கு சுமார் ரூ .1,000 வியாபாரத்தை உருவாக்குகிறது என்று பொருளாதார ஆய்வை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சீனாவுக்குக் கழுதைகளை ஏற்றுமதி செய்வதற்குப் பெரிய திட்டங்களை வைத்துள்ளது பாகிஸ்தான்.அதற்காக பல கோடி ரூபாய் முதலீட்டில் கழுதை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக பாகிஸ்தானில் கழுதை பண்ணைகளை அதிகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கழுதைப்பால் மற்றும் கழுதைகளின் தோல் ஆகியவை மருந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதால், சீனாவில் கழுதைகளுக்கான தேவை அதிகமாகி உள்ளது. கழுதைகளில்  இருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகள் கிடைக்கின்றன. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகளும் உள்ளன. 

நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. அதனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி கொன்று, மருந்துகளை தயாரிக்கின்றன. இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது. இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வம் காட்டி வருகிறார். கழுதைக்காகவே  இந்நாட்டில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

கழுதைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமராக இம்ரான் பொறுப்பேற்றதில் இருந்து கழுதைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகி வருகிறது. இதனால்,  எதிர்கட்சிகள் பிரதமர் இம்ரான்கானை ‘கழுதைகளின் அரசன்’ என பட்டப்பெயர் சூட்டி கிண்டல் செய்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக அவர்கள் முழக்கங்களை எழுப்பி, அமளியிலும் ஈடுபட்டனர்.

Next Story