அமீரக-இந்திய சுகாதார மந்திரிகள் சந்திப்பு


அமீரக-இந்திய சுகாதார மந்திரிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 8:20 PM GMT (Updated: 18 Dec 2021 8:20 PM GMT)

துபாயில் அமீரக சுகாதார மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் உடன் இந்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா சந்தித்து பேசினார்.

மந்திரிகள் சந்திப்பு

அமீரகம் வந்துள்ள இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா துபாயில், அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைசை சந்தித்து பேசினார்.

அப்போது சுகாதாரத்துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் கொரோனா உள்ளிட்ட பாதிப்பு சமயங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம், மருந்துப் பொருட்கள் பரிவர்த்தனையில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.

நவீன தொழில்நுட்பங்கள்

அப்போது அமீரக சுகாதார மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் கூறுகையில், ‘‘ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று பூர்வமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவானது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் நீடித்து வருகிறது. சுகாதாரத்துறையில் தரத்தை உயர்த்த தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையில் இந்தியாவுடனான உறவு சிறப்பாக இருந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்க வேண்டும்.

அமீரக அரசு, சர்வதேச அளவில் அனுபவம் கொண்ட அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள தயார் நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக மருத்துவத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவையும் வரவேற்கும். அமீரக தலைவர்களின் சிறப்பான வழிகாட்டுதல் காரணமாக கொரோனா காலத்தில் சிறப்பாக கையாளப்பட்டது’’ என்றார்.

மருத்துவத்துறையில் வளர்ச்சி

அதனைத் தொடர்ந்து இந்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

இந்தியா, அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மருத்துவத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. மேலும் மருத்துவத்துறையில் இருதரப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் கவனம் செலுத்தப்படுகிறது. அமீரகம் மருத்துவத்துறையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக மருத்துவ உள்கட்டமைப்பு சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது இந்திய தூதர் சஞ்சய் சுதீர் மற்றும் இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் புரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story