வாஷிங்டனில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் பரபரப்பு..!


வாஷிங்டனில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் பரபரப்பு..!
x
தினத்தந்தி 10 Feb 2022 10:34 PM GMT (Updated: 10 Feb 2022 10:34 PM GMT)

வாஷிங்டனில் தொடர் வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், நேற்று முன்தினம் ஒரே நாளில் தொடர்ந்து வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் அதிர்ந்து போனது. வாஷிங்டனில் டி.சி.பி.எஸ். மற்றும் டி.சி. சார்ட்டர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. 

தகவல் அறிந்ததும் வாஷிங்டன் பெருநகர போலீஸ் படையினர் அந்தப்பள்ளிக்கூடங்களுக்கு விரைந்தனர். அந்தப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு அங்குலம் அங்குலமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் வெடிகுண்டோ, பிற வெடிபொருட்களோ சிக்கவில்லை. டன்பார் பள்ளிக்கூடத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த நேரத்தில் அங்கு நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் கணவர் டக் எம்ஹாப் வந்திருந்தார். 

வெடிகுண்டு மிரட்டலால் அவரும் அங்கிருந்தவர்களும் பத்திரமாக வெளியே அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த நிலையில் அந்தப்பள்ளிக்கு மறுபடியும் நேற்று முன்தினமும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. எனவே ஒரே வாரத்தில் 2-வது முறையாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து வாஷிங்டன் மாநகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக ஆறு சிறார்களை எஃப்.பி.ஐ (FBI) அடையாளம் கண்டுள்ளது. அந்த  வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் இனரீதியாக அல்லது இனரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாதமாகவும், வெறுப்பு குற்றங்களாகவும் விசாரிக்கப்படுகின்றன என்று FBI தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சந்தேகிக்கப்படும் ஆறு இளைஞர்களுக்கும், மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள, வாஷிங்டனைச் சேர்ந்த 16 வயது இளைஞருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story