எல்லையில் பதற்ற நிலைமைக்கு காரணம், சீனாதான் - ஜெய்சங்கர் குற்றச்சாட்டு


எல்லையில் பதற்ற நிலைமைக்கு காரணம், சீனாதான் - ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Feb 2022 10:08 PM GMT (Updated: 12 Feb 2022 10:08 PM GMT)

கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைமைக்கு எழுதப்பட்ட உறுதிமொழிகளை சீனா மீறியதுதான் காரணம் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் குற்றம் சாட்டினார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ‘குவாட்’ என்னும் 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவருடன் ஆண்டனி பிளிங்கன் (அமெரிக்கா), யோஷிமாசா ஹயாஷி (ஜப்பான்), மரிஸ் பெயின் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரி மரிஸ் பெயினுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அவருடன் கூட்டாக நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் குவாட் வெளியுறவு மந்திரிகள்கூட்டத்தில் கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

ஆமாம். இந்திய சீன உறவுகள் குறித்து விவாதித்தோம். ஏனெனில் இது எங்கள் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதின் அங்கம் ஆகும். மேலும் இது நிறைய நாடுகள், குறிப்பாக ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் சட்டப்பூர்வ ஆர்வமாக இருக்கும் ஒரு விவகாரம்.

அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டில் படைகளை குவிக்க வேண்டாம் என்று இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்ததால்தான் தற்போதைய நிலைமை எழுந்துள்ளது.

எனவே ஒரு பெரிய நாடு எழுதிய உறுதிமொழிகளை புறக்கணிக்கிறபோது அது முழு சர்வதேச சமூகத்துக்கும் நியாயமான அக்கறையான பிரச்சினை ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் 2020 ஜூன் 15-ந் தேதி இந்திய படைகள் மீது சீனா தாக்குதல் தொடுத்ததும், இந்தியா பதிலடி கொடுத்ததும் இந்த மோதலில் இரு தரப்பிலும் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அங்கு ஒரு பக்கம் இரு தரப்பிலும் தலா 50 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம் இரு தரப்பு ராணுவ மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஆனாலும் பதற்றம் தொடர்கிறது.

மெல்போர்னில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனுடனும் ஜெய்சங்கர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தரப்பு உறவுகள், ஆப்கானிஸ்தான் நிலவரம், ரஷியா-உக்ரைன் நெருக்கடி, கொரோனா நிலவரம் ஆகியவை குறித்து அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கருத்து தெரிவிக்கையில், ‘‘குவாட் கூட்டத்தின் மூலம் இந்திய பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது பற்றி இரு தலைவர்களும் பேசினர்’’ என தெரிவித்தார்.

Next Story