போர்க்களம் போல் காட்சி அளிக்கும் பிரேசில்... மண்சரிவில் சிக்கி 130 பேர் உயிரிழப்பு


போர்க்களம் போல் காட்சி அளிக்கும் பிரேசில்... மண்சரிவில் சிக்கி 130 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 Feb 2022 11:47 AM GMT (Updated: 19 Feb 2022 2:43 PM GMT)

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்து உள்ளது.


பிரேசிலியா,


தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாகாணத்தில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ள நீரானது, ஊருக்குள் புகுந்ததில், மண்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் மூழ்கி போயின.  குறிப்பாக இந்த கனமழையால் அங்குள்ள மலைபிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.  இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. அதே போல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

இதை தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. நிலச்சரிவில் இருந்து 24 பேரை காப்பாற்றி உள்ளதாகவும், 439க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனேரோ பேரிடர் பாதித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.  அது ஒரு போர் காட்சி போல் உள்ளது என அவர் கூறினார்.  அடுத்தடுத்து அவசரகால நடவடிக்கைகளை எடுக்கும்படி தன்னுடைய மந்திரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்து உள்ளது.  200க்கும் மேற்பட்டோரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.  பாதிக்கப்பட்ட பகுதிளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  மண்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணி மேற்கொள்வதற்கான முயற்சிகள் தாமதமடைந்து உள்ளன.


Next Story