உக்ரைனில் உள்ள அணுமின் நிலையங்களை பாதுகாக்க வேண்டும் சர்வதேச அணுசக்தி கழகம் வலியுறுத்தல்


உக்ரைனில் உள்ள அணுமின் நிலையங்களை பாதுகாக்க வேண்டும் சர்வதேச அணுசக்தி கழகம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2022 10:04 PM GMT (Updated: 27 Feb 2022 10:04 PM GMT)

செர்னோபில் அணு உலையில் இருந்து இன்னும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியன்னா, 

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கின. முதல் நாளிலேயே, பிரிப்யட் நகர் அருகே உள்ள செர்னோபில் அணு உலைைய ரஷியா கைப்பற்றியது. அது, 1986-ம் ஆண்டு மிகப்பெரிய வெடிவிபத்தை சந்தித்த அணுஉலை ஆகும்.

செர்னோபில் அணு உலையில் இருந்து இன்னும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமை இயக்குனர் ரபேல் மரியானோ குரோசி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் 4 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 15 அணுஉலைகள் உள்ளன. அந்நாட்டின் மின்சார தேவையில் பாதியை இந்த அணுஉலைகள்தான் தீர்த்து வருகின்றன. நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் சீராக இருப்பதாகவும், வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் எங்களிடம் உக்ரைன் தெரிவித்துள்ளது. தங்களின் ஊழியர்கள், அணுமின் நிலையங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. அணுமின்நிலையங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்த காரியத்தையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய செயல்கள், மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story