#லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை கண்டு நேட்டோ படைகள் அச்சம் - உக்ரைன் அதிபர் பேச்சு


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 21 March 2022 3:42 AM IST (Updated: 22 March 2022 9:17 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் ரசாயன ஆலை மீது ரஷிய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின. இதனால் ஆலையில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு அமோனியா வாயு கசிந்தது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

மார்ச் 22, 08.16 AM


மார்ச் 22, 07.07 AM 


மார்ச் 22, 05.30  AM

பெர்டியன்ஸ்கில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்: மரியுபோல் நகர சபை

மேலும் 4,384 மரியுபோல் குடியிருப்புவாசிகள் துறைமுக நகரமான பெர்டியன்ஸ்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக  மரியுபோல் நகர சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். அந்த வணிக வளாகத்தை உக்ரைன் ராணுவத்தினர் ராக்கெட் அமைப்புகளை சேமிக்க பயன்படுத்தி வந்ததாக ரஷிய படையினர் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 22, 04.30  AM

பிடிபட்ட 500 க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களை இடமாற்றம் செய்ய தயாராக இருப்பதாக ரஷியா கூறுகிறது.

பிடிபட்ட 500 க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் விவரங்களை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ரஷியா அனுப்பியுள்ளது என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் ரஷியாவின் மனித உரிமைகள் ஆணையரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

மார்ச் 22, 03.30  AM

உக்ரைனில் போர் வலுத்து வரும் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகிற 25-ந்தேதி போலந்துக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் தலைநகர் வார்ஷாவில் அந்த நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவை நேரில் சந்தித்து போர் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜனாதிபதி ஜோ பைடன், முதற்கட்டமாக வருகிற 24-ந்தேதி பெல்ஜியம் செல்கிறார். அங்கு தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ தலைவர்கள், ஜி7 தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திக்கிறார்.

அவர்களுடன் ரஷியாவின் மீதான பொருளாதார தடைகள் மற்றும் ரஷியாவின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான உக்ரைன் மக்களுக்கான மனிதாபிமான முயற்சிகள் குறித்து முக்கிய ஆலேசானைகளை மேற்கொள்கிறார்.

அதனை தொடர்ந்து 25-ந்தேதி அவர் போலந்து செல்கிறார். உக்ரைனில் ரஷிய தாக்குதலால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து அந்த நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைனுக்கான உலக நாடுகளின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் இந்த சந்திப்பு அமையும். அதே வேளையில் ஜோ பைடன் உக்ரைனுக்கு செல்லும் திட்டம் ஏதுமில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 22, 02.30  AM

ரஷியாவுடனான போர்  சமாதான முடிவுக்கு வர வேண்டும் என்றால் உக்ரைனியர்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் எந்த வகையான சமாதானதிற்கு மக்கள் பேச வேண்டும் என்பதை அதில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

கார்கிவ், மரியுபோல் மற்றும் கீவ் நகரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று, மாஸ்கோ இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முதலில் அவர்கள் எங்களை அழித்த பின்னரே ரஷியாவின் இறுதி எச்சரிக்கை நிறைவேறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 22, 01.30  AM

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய தயராக இருப்பதாக சுவிட்சர்லாந்து அதிபர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வுகாண மத்தியஸ்தராக செயல்படவும், உக்ரைன்-ரஷியா இடையிலான சமரச பேச்சுவார்த்தையை நடத்தவும் சுவிட்சர்லாந்து தயாராக உள்ளது. சுவிட்சர்லாந்து நடுநிலை மற்றும் மனிதாபிமான பாரம்பரியம் இரண்டையும் கொண்டுள்ளது” என கூறினார்.

மார்ச் 22, 00.30  AM

உக்ரைனில் கிழக்கு பகுதியில் சுமி நகரில் உள்ள ரசாயன ஆலை மீது நேற்று அதிகாலை ஏவுகணை வீசப்பட்டது. இதில் அந்த ஆலையில் பெரும் சேதம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.

இதை தொடர்ந்து ரசாயன ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து 5 கி.மீ. தொலைவுக்கு காற்றில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே சிட்ரிக் அமிலத்தில் ஊறவைத்த காஸ் பேண்டேஜ்கள் மூலம் சுவாசிக்குமாறு சுமி நகர மக்களை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அதே சமயம் ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது பொய் குற்றச்சாட்டை முன்வைக்க உக்ரைன் அரசு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக பொய் கூறுவதாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.

மார்ச் 21, 23.30  PM

கெர்சனில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷியா ஒரு போர்க்குற்றவாளி என  உக்ரைன்  வெளியுறவுத்துறை மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், 

கெர்சனில், ரஷியா படைகளுக்கு  எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய நிராயுதபாணி மக்கள் மீது ரஷிய போர்க் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காயமடைந்த அப்பாவி மக்களை நீங்கள் காணலாம். இது ரஷியாவின் அசிங்கமான முகம், மனித குலத்திற்கு பெருத்த அவமானம். நாம் ரஷியாவின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்.  அவர்களை தடை விதிக்கவும்  தனிமைப்படுத்தவும், போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  

மார்ச் 21, 22.35  PM

ரஷியா ஷெல் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கீவ் நகரில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக  கெய்வ் மேயர் தெரிவித்துள்ளார்

உக்ரைன் தலைநகரில்  நீண்ட நேரம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக கிய்வ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.  ஏனெனில் உள்ளூர் அதிகாரிகள் ரஷிய படைகளால் மேலும் தாக்குதல்களை சந்திப்பதால் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 21, 9.30  PM

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் சீனா முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 


மார்ச் 21, 8.30  PM

இன்ஸ்டகிராம், பேஸ்புக்கிற்கு ரஷிய நீதிமன்றம் தடை

மெடா நிறுவனங்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்  தீவிரவாத தன்மையுடன் இருக்கக் கூடும் எனக்கூறி,  இரு சமூக வலைத்தளங்களுக்கும் ரஷிய கோர்ட் தடை விதித்துள்ளது. 

மார்ச் 21, 7.15 PM

மரியுபோல் நகரில் சரண் அடையும் பேச்சுக்கே இடம் இல்லை: உக்ரைன்

மரியுபோல் நகரை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள், அந்நகரில் உள்ள உக்ரைன் படைகள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு சரண் அடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள உக்ரைன், சரண் அடையும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது. 


மார்ச் 21, 6.00 PM

அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை; ரஷியா 

ரஷியா மற்றும்  உக்ரைன்  இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் இன்னும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று ரஷிய செய்தி தொடர்பாலர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.  மேலும், உக்ரைன் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய நாடுகள், பேச்சுவார்த்தைகளில்  உக்ரைனை   இன்னும் ஆக்கப்பூர்வமாக  செயல்பட வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்லார். 

மார்ச் 21, 4.00 PM


மார்ச் 21, 2.00 PM


மார்ச் 21, 8.33 am


7,295 பேர் வெளியேற்றம் உக்ரைன் துணை பிரதமர்

உக்ரேனிய நகரங்களில் இருந்து மொத்தம் 7,295 பேர் மனிதாபிமான தாழ்வாரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக்  கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட ஏழு வழித்தடங்களில் நான்கு செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அரசு இன்று  கிட்டத்தட்ட 50 பஸ்கள் மரியுபோலில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்காக அனுப்ப திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.

* மரியுபோலில் ஆயுதங்களைக் கீழே போடுமாறு ரஷியா உக்ரைன்  படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது

கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரைன் படைகள் சரணடைய வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது.

உக்ரைன் ராணுவம் "உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள்," என்று  ரஷிய கர்னல்-ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ், பாதுகாப்பு அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்ட ஒரு மாநாட்டில் கூறினார்.

மேலும் "ஒரு பயங்கரமான மனிதாபிமான பேரழிவு உருவாகியுள்ளது," மிஜின்ட்சேவ் கூறினார். "ஆயுதங்களைக் கீழே போடுபவர்கள் அனைவரும் மரியுபோலில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறார்கள் என கூறினார். 

மார்ச் 21 இன்று  மாஸ்கோ நேரப்படி காலை 10 மணிக்கு (07:00ஜிஎம்டி) மரியுபோலில் இருந்து மனிதாபிமான தாழ்வாரங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

* மரியுபோல் நோக்கி முன்னேறி வருவதாக ரஷியா கூறுகிறது

ரஷிய இராணுவம் கிழக்கு உக்ரைனுக்குள் மேலும் 12 கி.மீ தூரம் முன்னேறி, மரியுபோல் அருகே உள்ள நிகோல்ஸ்கே  எல்லையை அடைந்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

* ரஷியா விவகாரத்தில் நடுநிலையை கைவிட்டு தங்கள் நாட்டை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு, உக்ரைன் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி, 80 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களை உக்ரைன் காப்பாற்றியதாக நினைவு கூர்ந்தார். தற்போது இஸ்ரேல் நடுநிலைமையை கைவிட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இதுவரை 34 லட்சம் மக்களை அகதிகளாக மாற்றி இருக்கிறது. அவர்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ், சுலோவேகியா நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

மொத்தம் 1 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு நேற்று தெரிவித்தது. அவர்களில் 65 லட்சம் பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சொல்கிறது.

ஆனால், உக்ரைன் நகரங்களை எல்லாம் சுவடு தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று ரஷியா கங்கணம் கட்டிக்கொண்டு, காட்டுமிராண்டித்தமான தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதுவும் ரஷிய படைகளின் முற்றுகையின்கீழ் உள்ள மரியுபோல் நகரம், பூமியில் ஒரு நரகமாக மாறி வருவது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துறைமுக நகரமான மரியுபோலை 3 வார காலமாக ரஷியா தாக்கி வருகிறது. எவ்வளவு அடித்தாலும் தாங்கும் என்ற நினைப்பில் அங்கு குண்டுமழை பொழிந்து வருகிறது. குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள், வெடிகுண்டு தவிர்ப்பு புகலிடங்கள் எதுவும் தாக்குதலுக்கு விதிவிலக்காக இல்லை.

போர் தீவிரம் அடைந்து வருவதால், அங்கிருந்து கடந்த ஒரு வாரத்தில் 40 ஆயிரம் பேர் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

2,300 பேர் ஏற்கனவே கொன்று குவிக்கப்பட்டும் ரஷிய படைகளின் ரத்த தாகம் குறையவில்லை. குடிதண்ணீர், சாப்பாடு, மின்சாரம் எதுவும் இன்றி இந்த நகர மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேட்டை நாய் போல ரஷியா அந்த நகரை துரத்திக்கொண்டிருக்கிறது.

அங்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஏறத்தாழ 400 பேர் உயிருக்குப் பயந்து தஞ்சம் அடைந்திருந்த கலைப்பள்ளி மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த 400 பேரின் கதி என்னவானது என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இந்த நகரை ரஷியா உருக்குலையச்செய்து வருவது பற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவிக்கையில், “அமைதியான நகரத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் செய்தது, பல நூற்றாண்டு காலத்துக்கு நினைவுகூரப்படும் பயங்கரவாதம் ஆகும்” என குறிப்பிட்டார்.

உக்ரைனில் பாதாள ஆயுதக்கிடங்குகளை அழிப்பதற்கு கின்ஸால் என்னும் ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்தியது.

நேற்று மறுபடியும் கருங்கடல் துறைமுக நகரான மைகோலாய்வ் அருகேயுள்ள கோஸ்டியன்டினிவ்காவில் இருந்த எரிபொருள் கிடங்கை கின்ஸால் ஏவுகணை கொண்டு தாக்கி ரஷியா அழித்துள்ளது. இதை அந்த நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் உறுதிப்படுத்தினார். இந்த தாக்குதலில் கலிபிர் ரக குரூஸ் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஓவ்ரூச்சில் வெளிநாட்டு போராளிகளும், உக்ரைன் சிறப்பு படைகளும் தங்கியுள்ள ராணுவ தளத்தை வான்வழி ஏவுகணைகள் தாக்கி அழித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு மத்தியில் ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ள கெர்சன், காகோவ்கா, பெர்டியான்ஸ்க் ஆகிய நகரங்களில் நேற்று பொதுமக்கள் கண்டன பேரணிகளை நடத்தினர்.

கெர்சனில் நடந்த பேரணியில் பங்குபெற்றவர்கள் உக்ரைன் தேசியகொடிகளை அசைத்து “கெர்சன் தான் உக்ரைன்” என கோஷங்களை முழங்கிய காட்சிகளை கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story