உக்ரைன் ரசாயன ஆலையில் ரஷிய தாக்குதல்; 2.5 கி.மீ.க்கு அம்மோனியா வாயு கசிவு


உக்ரைன் ரசாயன ஆலையில் ரஷிய தாக்குதல்; 2.5 கி.மீ.க்கு அம்மோனியா வாயு கசிவு
x
தினத்தந்தி 21 March 2022 5:33 AM GMT (Updated: 21 March 2022 5:33 AM GMT)

உக்ரைனில் இன்று அதிகாலை நடந்த ரஷிய வான்வழி தாக்குதலில் ரசாயன ஆலையில் சேதம் ஏற்பட்டு 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.கீவ்,


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது.  இது போரல்ல, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.  உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்து இருந்தது.

எனினும், தொடர்ந்து 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது.  இரு தரப்பிலும் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.

போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன.  ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன.  எனினும், போரை கைவிட ரஷியா மறுத்து உள்ளது.

உக்ரைனும், தனியாளாக போரை எதிர்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனின் சுமி நகர கவர்னர் ஓபிளாஸ்ட் டிமிட்ரோ ஜிவித்ஸ்கி கூறும்போது, ரஷிய படைகள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமிகிம்ப்ரோம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் சேதம் ஏற்பட்டு உள்ளது.  அந்த ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அந்த பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாயு கசிவு பரவியுள்ளது என உக்ரைனில் இருந்து வெளிவரும் தி கீவ் இன்டிபெண்டன்ட் என்ற பத்திரிகை தெரிவித்து உள்ளது.


Next Story