ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்தது: இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 April 2022 12:30 AM GMT (Updated: 6 April 2022 12:36 AM GMT)

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடிக்கிறது. ஆளும் கூட்டணியில் இருந்து 40 எம்.பி.க்கள் விலகியதால் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

கொழும்பு,

அன்னிய செலாவணி கரைந்தது, அளவுக்கு அதிகமான கடன்கள் போன்றவற்றால் இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

உணவுப்பொருள் தட்டுப்பாடு

பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்திருக்கும் இலங்கை அரசு, தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருட்கள் வரை எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இதனால் நாடு முழுவதும் மேற்படி பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்ற எரிபொருட்களை நாட்கணக்கில் காத்திருந்துதான் வாங்கும் நிலைமை உருவாகி உள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி முடங்கியதால், நாடு முழுவதும் தினசரி பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டம்

அரிசி, பருப்பு, பால் பவுடர், கோதுமை என மக்களின் அன்றாட உணவு பொருட்கள் அனைத்தும் எட்டாத விலையில் விற்கப்படுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்குநாள் கேள்விக்குறியாகி வருகிறது.

உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றின் தட்டுப்பாடு, பல மணி நேர மின்வெட்டு, கடைகள் அடைப்பு, நிறுவனங்கள் மூடல், பொருட்கள் வாங்கும் திறன் இழப்பு என மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் உடனடியாக பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர்.

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்து, இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெறுமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து விட்டன. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தி உள்ளன.

இதனால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது.

40 எம்.பி.க்கள் விலகல்

இதை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆளும் கூட்டணிக்குள்ளேயே வெளிப்படையாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா தலைமையிலான கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நேற்று விலகினர்.

மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிடியாவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இந்த எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தனித்து செயல்படுவது என முடிவு செய்துள்ளனர். அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என அறிவித்து உள்ளனர்.

பெரும்பான்மை இழந்தது

இதன் மூலம் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. ஆட்சியை தக்க வைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் விலகியதால் இலங்கை அரசு கவிழும் நிலையில் உள்ளது.

ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக போவதில்லை என கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். அதேநேரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றவரிடம் அரசை ஒப்படைக்க உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர்களிடம் அவர் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க கோத்தபய மற்றும் மகிந்த இருவரும் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. கண்டன பேரணிகள், மறியல், ஆர்ப்பாட்டம் என பல பகுதிகளில் போராட்டம் நீடித்து வருகிறது.

மருத்துவ அவசர நிலை

இதற்கிடையே ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்களில் அனைத்து விதமான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் உயர்மட்ட மருத்துவ அமைப்பான அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்துக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டின் மருத்துவ அமைப்பு முற்றிலுமாகசீரழிந்து போனதை தடுக்க அரசும், சுகாதார அமைச்சகமும் தவறிவிட்டதாகவும், இதன் மூலம் மக்களின் வாழும் உரிமையை கூட உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாகவும் அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Next Story