எந்த சூழ்நிலையிலும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டார்: இலங்கை அரசு அறிவிப்பு


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 7 April 2022 12:05 AM GMT (Updated: 7 April 2022 12:05 AM GMT)

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டார். தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்வார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொழும்பு, 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அந்நாட்டு மக்களை கோபம் கொள்ள செய்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தை ஒடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் அவசர நிலையை அதிபர் பிறப்பித்தார்.

இலங்கை மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். புதிதாக 4 மந்திரிகளை மட்டுமே அதிபரால் நியமிக்க முடிந்தது. அவர்களில் ஒருவர் 24 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்து விட்டார். அனைத்து கட்சிகளும் இடம்பெற்ற தேசிய அரசு அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அதிபர் அழைப்பு விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல், அதிபர் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரம் அடைந்ததால், நேற்று முன்தினம் இரவு திடீரென அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே ரத்து செய்தார்.

அவரது தலைமையிலான ஆளும் கூட்டணியில் இருந்து 42 எம்.பி.க்கள் விலகினர். தனித்து செயல்பட போவதாக அறிவித்துள்ளனர். இதனால், ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்தது. அதன்பிறகாவது அதிபர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிபர் பதவி விலக மாட்டார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அரசு தலைமை கொறடாவான ஜான்ஸ்டன் பெர்னாண்டோ என்ற மந்திரி பேசியதாவது:-

கோத்தபய ராஜபக்சே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர். எனவே, அவர் பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை. எந்த சூழ்நிலையிலும் ராஜினாமா செய்ய மாட்டார். தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்வார்.

அதிபர் மாளிகையையும், அரசு சொத்துகளையும் தாக்க முயற்சி நடந்ததால்தான், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாதான் காரணம். இந்த வன்முறை அரசியலை அனுமதிக்க முடியாது. மக்கள், வன்முறைக்கு முடிவுகட்ட வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அவர் பேசினார்.

இதற்கிடையே, இலங்கையில் நடப்பதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையரின் செய்தித்தொடர்பாளர் லிஸ் திரோசெல் தெரிவித்துள்ளார். பொருளாதாரத சிக்கலுக்கு தீர்வு காண அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளார். மே மாத இறுதிக்குள் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நார்வே, ஈராக், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 3 இலங்கை தூதரங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய 42 எம்.பி.க்களில் ஒருவரான இடதுசாரி தலைவர் வாசுதேவ நாணயக்காரா, இலங்கையில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார். ‘‘அனைவரும் பங்கேற்கக்கூடிய அரசு 6 மாதங்களுக்கு பதவி வகிக்க வேண்டும். அதன்பிறகு தேர்தல் நடத்த வேண்டும். அதுதான் பொருளாதார சிக்கலுக்கு முடிவு கட்ட ஒரே வழி’’ என்று அவர் கூறினார்.


Next Story