இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 9 April 2022 6:06 PM GMT (Updated: 9 April 2022 6:06 PM GMT)

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இயல்புநிலை முடக்கம்

தீவு நாடான இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.

தினந்தோறும் 13 மணி நேர மின்வெட்டு, சமையல் எரிவாயு கிடைக்காததால் சமையல் செய்ய முடியாத நிலை, பெட்ரோல்-டீசலுக்காக நாள்கணக்கில் காத்திருக்கும் நிலை, மருந்துகள் இல்லாமல் ஆஸ்பத்திரிகள் மூடல், பேப்பர் இல்லாததால் பள்ளிகள் மூடல் என அனைத்து துறையினரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பதவி விலக மறுப்பு

இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலுக்கு தீர்வு காண வழி தெரியாமல் ஆளும் ராஜபக்சேக்களின் அரசு திணறி வருகிறது. நாடாளுமன்றத்தில் 3 நாட்களாக விவாதம் நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.

இதனால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த நெருக்கடிக்கு தான் காரணமில்லை என தொடர்ந்து மறுத்து வரும் கோத்தபய ராஜபக்சே, எனவே ஒருபோதும் பதவியில் இருந்து விலகமாட்டேன் என திட்டவட்டமாக கூறி வருகிறார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

எனவே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அந்தவகையில் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.) கட்சி திட்டமிட்டு உள்ளது.

225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த கட்சிக்கு 54 உறுப்பினர்கள் உள்ளனர். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற கட்சிகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது. இதைப்போல பதவி விலக மறுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர தேசிய மக்களின் சக்தி கட்சியும் திட்டமிட்டு உள்ளது.

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு

இந்த கட்சியின் எம்.பி. விஜிதா ஹெராத் நாடாளுமன்றத்தில் பேசும்போது கூறுகையில், ‘நாட்டின் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு, முதலில் அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காண வேண்டும்’ என தெரிவித்தார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே தானாக பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமும், பதவி நீக்க தீர்மானமும் கொண்டு வர தனது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கூட்டணி அரசில் இருந்து 42 எம்.பி.க்கள் சமீபத்தில் விலகியதால் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அனைத்தையும் திருடிவிட்டார்

இது ஒருபுறம் இருக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏதிராக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. காலேயில் உள்ள அதிபரின் அலுவலகத்துக்கு அருகே நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ‘எங்களிடம் இருந்த அனைத்தையும் திருடிவிட்டார். எனவே அவர் நிச்சயம் வீட்டுக்கு செல்ல வேண்டும்’ என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள், அரசு-தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு

இதைப்போல தலைநகர் கொழும்புவிலும் அதிபரின் செயலகத்துக்கு வெளியே போலீசார் மற்றும் அதிகாரிகளின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானோர் குவிந்தனர். தேசிய கொடிகள் மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியிருந்த மக்கள், இலங்கை அரசில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் விலக வேண்டும் என கோஷமிட்டனர்.

இதைத்தவிர நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்க இலங்கை அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு என அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது.

ஐ.நா. கண்டனம்

இந்த நடவடிக்கையை ஐ.நா. கண்டித்து உள்ளது. அமைதியாக திரள்வதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் மக்களுக்கு உரிமை உண்டு என ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மாணவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும், தங்கள் அரசியல் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளவும், ஆன்லைன் மற்றும் நேரில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேறு வழி இல்லை

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவது தொடர்பாக சர்வதேச நிதியத்துடன் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளது. இதில் சர்வதேச நிதியத்திடம் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு உதவி பெற முடியும் என நம்புவதாக நிதி மந்திரி அலி சப்ரி தெரிவித்தார். கடனை திருப்பி செலுத்துவதற்கான கால நீட்டிப்பை பெறுவதை தவிர வேறு வழி இல்லை எனவும் அவர் கூறினார்.

நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையின் மத்திய வங்கி முன்னெப்போதும் இல்லாத வகையில் 700 அடிப்படை புள்ளிகளால் வட்டி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய வங்கியின் நிலையான வைப்புத்தொகை வட்டி விகிதம் 13.50 சதவீதமும், நிலையான கடன் வட்டி விகிதம் 14.50 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Next Story