ஜிகா வைரசின் ஒற்றை மரபணு பிறழ்வால் பெரிய பாதிப்புகள்... ஆய்வில் எச்சரிக்கை

ஜிகா வைரசின் ஒற்றை அமினோ அமில மாற்றம் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கலிபோர்னியா,
கொரோனா வைரசின் பாதிப்புகள் நாட்டில் குறைந்து வரும் சூழலில் கொசுக்களால் பரவும் ஜிகா வைரசின் பாதிப்புகளை பற்றி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு ஒன்றை கண்டறிந்து உள்ளனர்.
ஏடிஸ் எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரசால் மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம்.
ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். இந்த, அதிவிரைவாக பரவ கூடிய தன்மை கொண்ட ஜிகா வைரசில் ஒற்றை மரபணு பிறழ்வு கூட மிக பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கொசுக்களால் பரவ கூடிய இந்த வைரசானது பெரியவர்களிடம் லேசான பாதிப்புகளை வெளிப்படுத்தினாலும், வளர்ந்து வரும் சிசுவை பாதிக்க கூடியது. இதனால், சிறிய அளவிலான தலை கொண்ட மைக்ரோசெபாலி என்ற வியாதியையும், வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் பேச்சு திறனில் காலதாமதம் ஆகியவற்றை ஏற்படுத்த கூடும்.
இதுவே தீவிர பாதிப்புகளில், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் கருக்கலைந்து போதல் மற்றும் குறை பிரசவம் ஆகிய பாதிப்புகளையும் ஏற்படுத்த கூடும்.
கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்த வைரசானது பரவ தொடங்கியது சர்வதேச அளவில் எச்சரிக்கையை விடுத்தது. இதன்பின் ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன.
இதில், கலிபோர்னியாவில் உள்ள லா ஜொல்லா மையத்தின் ஆய்வாளர்கள், ஒற்றை அமினோ அமிலத்தில் ஏற்பட கூடிய ஒரு மாற்றம் கூட அந்த வைரசை அதிக பாதிப்பு திறன் கொண்ட ஒன்றாக மாற்றி விடும் என கண்டறிந்து உள்ளனர்.
முன்பிருந்தே, அதிவிரைவாக பரவல் தன்மை கொண்ட ஜிகா வைரசானது இந்த உருமாற்றம் அடைந்து விட்டால், இன்னும் அதிதீவிர பரவல் தன்மையை பெற்று விடும் என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
இந்த பிறழ்வானது (என்.எஸ்.2.பி ஐ39வி/ஐ39டி என அழைக்கப்படுகிறது) எலி, கொசுக்கள் மற்றும் மனித செல்கள் ஆகியவற்றில் வைரசின் பரிணாம வளர்ச்சி அடையும் திறனை மேம்படுத்துகிறது.
இந்த ஜிகா வைரசானது, டெங்கு வைரசுடன் உயிரியல் பண்புகளை ஒத்திருக்கிறது. இந்த இரண்டும் ஆர்.என்.ஏ. வகையை சேர்ந்தவை. இதனால், அவை எளிதில் மரபணுவை மாற்றி கொள்ள கூடியவை.
எனவே, அதிக கொசுக்கள் இருக்கும்போது, மனிதர்களும் அதிக அளவில் உள்ளபோது, இந்த வைரசானது தொடர்ச்சியாக பரவி மரபணு மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதனை தொடர்ந்து, மனிதர்களில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஆபத்தும் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story