பாகிஸ்தானில் பஞ்சாப் புதிய முதல்-மந்திரியாக பிரதமரின் மகன் தேர்வு


பாகிஸ்தானில் பஞ்சாப் புதிய முதல்-மந்திரியாக பிரதமரின் மகன் தேர்வு
x
தினத்தந்தி 17 April 2022 1:57 AM GMT (Updated: 17 April 2022 1:57 AM GMT)

பாகிஸ்தானில் பஞ்சாப் சட்டசபையின் புதிய முதல்-மந்திரியாக பிரதமரின் மகன் ஹம்சா ஷபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.




லாகூர்,



பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து, கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கினார்.  அவரும் அதனை ஏற்று கொண்டார்.  இதனையடுத்து, பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது.  பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 2ந்தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்பட இருந்தது.  பின்னர் காரணமின்றி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (வயது 70) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  அவர், புதிய அமைச்சரவையை அமைக்கும் பணிகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை நேற்று கூட்டப்பட்டது.  இதற்காக அவைக்கு வருகை தந்த துணை சபாநாயகர் தோஸ்த் முகமது மஜாரி மீது, பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள் லோட்டாக்களை (பாத்திரம்) வீசி எறிந்து அமளியில் ஈடுபட்டனர்.

பி.டி.ஐ. கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் பிரிந்து சென்று எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தந்துள்ளனர்.  இதற்கு எதிராகவும் பி.டி.ஐ. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

துணை சபாநாயகர் மஜாரி மீதும் லோட்டாக்கள் வீசப்பட்டன.  அவர் மீது பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள், ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து அவை பாதுகாவலர்கள் மஜாரியை சூழ்ந்து கொண்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கினர்.  இதனால், அவையில் அமளி ஏற்பட்டது.

இதன்பின்னர், பஞ்சாப் முதல்-மந்திரியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த ஹம்சா ஷபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதனிடையே, வாக்கெடுப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, துணை சபாநாயகர் மஜாரி மீது தாக்குதல் நடத்தியதற்காக பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  அக்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பும் செய்திருந்தனர்.

பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹம்சா ஷபாஸ், பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரிப்பின் மகனாவார்.  197 வாக்குகளை பெற்று ஹம்சா வெற்றி பெற்றார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட பர்வேஷ் இலாஹி ஒரு வாக்கு கூட பெறவில்லை.  அவரது கட்சி மற்றும் பி.டி.ஐ. கட்சி தேர்தலை புறக்கணித்து இருந்தன.

ஹம்சாவின் குடும்பத்தில் இருந்து பஞ்சாப் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஹம்சா ஷபாஸ் 3வது நபர் ஆவார்.  இதற்கு முன்பு, தற்போது பிரதமராக உள்ள ஷபாஸ் ஷெரிப், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிப் ஆகியோர் இந்த பதவியை வகித்து உள்ளனர்.


Next Story