காங்கோவில் எபோலா பரவல்; தீவிர கண்காணிப்பு பணிகளில் தான்சானியா


காங்கோவில் எபோலா பரவல்; தீவிர கண்காணிப்பு பணிகளில் தான்சானியா
x
தினத்தந்தி 3 May 2022 10:13 AM IST (Updated: 3 May 2022 10:13 AM IST)
t-max-icont-min-icon

காங்கோ நாட்டில் எபோலா பரவலை அடுத்து தான்சானிய அரசு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.





தர் எஸ் சலாம்,


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் எபோலா பாதிப்பு இதுவரை 13 முறை கண்டறியப்பட்டு உள்ளது.  அவற்றில், காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில், கடந்த 2018-2020ம் ஆண்டில் மிக அதிக அளவாக 2,300 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இது 2வது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே அந்நாட்டின் கிழக்கே 11 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டது.  இதில், 6 பேர் உயிரிழந்தனர்.  அதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், 4 மாதங்களுக்கு பின்னர் வடமேற்கே புதிதாக ஒரு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தேசிய உயிரிமருத்துவ ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் இறுதியில் உறுதிப்படுத்தியது.  வன விலங்குகளால் பரவும் இந்த வைரசானது, சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால் உயிரிழப்பும் ஏற்படுத்தும்.

இந்நிலையில், காங்கோவில் எபோலா பரவலை தொடர்ந்து அண்டை நாடான தான்சானியாவின் சுகாதார அதிகாரிகள் அதிக கண்காணிப்புடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கோ எல்லையை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு பணிக்கான நிபுணர்கள் அடங்கிய பல குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அந்நாட்டு சுகாதார துறை நிரந்தர செயலாளர் ஆபெல் மகுபி தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் எபோலா பரவலை பற்றி அறிந்து நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.  பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  அரசு இந்த விசயத்தில் பணியாற்றி வரும் சூழலில் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21ந்தேதியில் இருந்து எபோலா தொற்றுக்கு காங்கோவின் வடமேற்கே உள்ள பந்தகா நகரில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஏப்ரல் 27 வரை 267 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story