போலந்தில் வெற்றி தின நிகழ்ச்சி; ரஷிய தூதர் மீது பெயிண்ட் வீசி தாக்குதல்


போலந்தில் வெற்றி தின நிகழ்ச்சி; ரஷிய தூதர் மீது பெயிண்ட் வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 9 May 2022 3:32 PM GMT (Updated: 9 May 2022 3:32 PM GMT)

போலந்தில் நடந்த வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷிய தூதர் மீது பெயிண்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
வார்சா,2ம் உலக போரின் முடிவில் கடந்த 1945ம் ஆண்டு, ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளுக்கு எதிராக போரிட்ட ரஷியா வெற்றி பெற்றது.  இந்த போரில் ஜெர்மனி வீழ்த்தப்பட்டது.

இதனை நினைவுகூரும் வகையில் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் மே 9ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலிலும், இந்த ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டங்கள் நடந்தன.  அதன்படி, இன்று ராணுவ அணிவகுப்பு நடந்தது.  இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார்.

இதேபோன்று போலந்து நாட்டில் உள்ள வார்சா நகரிலும் வெற்றி தின கொண்டாட்டங்கள் நடந்தன.  இதில், போரில் உயிரிழந்த சோவியத் யூனியன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக போலந்து நாட்டுக்கான ரஷிய தூதர் செர்கே ஆண்ட்ரீவ் சென்றுள்ளார்.  உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் போரால் ஒன்றுமறியாத மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.  எனினும், இரு நாடுகளும் போரை நிறுத்தவில்லை.

இந்த சூழலில், ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போலந்தில் உள்ள ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக, ரஷிய தூதர் ஆண்ட்ரீவ் மீது போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சிவப்பு வர்ண பெயிண்ட்டை அவரது முகத்தில் வீசினார்.  எனினும் பொறுமை காத்த தூதர், பின்னர் முகத்தில் வழிந்த பெயிண்டை துடைத்து விட்டார்.

ரஷிய தூதர் மற்றும் அவருடன் வந்த மற்ற உறுப்பினர்களையும், வார்சாவில் உள்ள சோவியத் வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்க விடாமல் தடுப்பதில் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்று விட்டனர் என இன்டிபென்டண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Next Story