18 வயது வாலிபராக காட்சியளிக்க... 46 வயது கோடீஸ்வரர் பின்பற்றும் வழிமுறைகள்


18 வயது வாலிபராக காட்சியளிக்க... 46 வயது கோடீஸ்வரர் பின்பற்றும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 26 Sep 2023 10:32 AM GMT (Updated: 26 Sep 2023 12:38 PM GMT)

46 வயதிலும் இளமை பொலிவுடன் 18 வயது வாலிபராக காட்சியளிக்க கோடீஸ்வரர் ஒருவர் பின்பற்றும் வழிமுறைகள் ஆச்சரியமூட்டுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

வயது முதிர்ச்சி அடையாமல் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு இல்லை? ஆனால், இயற்கையாக வயது ஆக ஆக, முகம், கை, கால் என உடலின் மொத்த தோற்றமும் மாறுபட்டு, பொலிவு குறைகிறது. முதிர்ச்சியும், தளர்ச்சியும் ஏற்படுகிறது.

ஆனால், தன்னுடைய வயது ஏறாமல் 18 வயது வாலிபராகவே தொடர்ந்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக கோடீஸ்வரர் ஒருவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். பிரையன் ஜான்சன் (வயது 46) என்ற அந்நபர் இளமை தோற்றத்திற்காக ஆண்டுக்கு ரூ.16.64 கோடி செலவிடுகிறார்.

ஜான்சன், 30-வது வயதில், தன்னுடைய பணபரிவர்த்தனை நிறுவனம் ஒன்றை ஈபே என்ற நிறுவனத்திற்கு ரூ.6,658.50 கோடிக்கு விற்றார். இவருடைய சொத்து மதிப்பு இப்போது ரூ.3,329 கோடியாக உள்ளது. அவர் இளமை பொலிவுக்காக பல்வேறு விசயங்களை பின்பற்றி வருகிறார்.

ஜான்சன், தன்னுடைய உடலை பராமரிக்க பல்வேறு சுகாதார கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி வருகிறார். இதற்காக, பேஸ்பால் விளையாட்டுக்கான தொப்பி ஒன்றை அணிகிறார். அது தலை பகுதியில் சிவப்பு ஒளியை பாய்ச்சுகிறது.

அவருடைய மலக்கழிவு மாதிரிகளை அவரே சேகரிக்கிறார். தூங்கும்போது அந்தரங்க உறுப்பில் கவசம் போன்று சிறிய பேக்கிங் செய்து கொள்கிறார். அது இரவுநேர செயல்பாடுகளை கண்காணிக்கிறது என கூறுகிறார்.

அவர், ஒட்டுமொத்த உடலையும் வயது முதிர்வுக்கு எதிராக செயல்பட விரும்புகிறார். அவருடைய இலக்கு என்னவென்றால், 46 வயது கொண்ட உடல் உறுப்புகளை, 18 வயது உடையவரின் உறுப்புகளாக தோற்றம் அளிக்கவும் மற்றும் செயல்படவும் வைப்பது ஆகும்.

இதற்காக நாளொன்றுக்கு 111 மாத்திரைகளை எடுத்து கொள்கிறார். இரவு உணவை காலை 11 மணிக்கே சாப்பிடுகிறார். இவரை பார்த்து இவருடைய தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி கேத் தோலோ என்பவரும் வாழ்க்கை முறையை மாற்றி கொண்டார்.

இ-ஆடி காரை வைத்திருக்கும் ஜான்சன் அவரே காரை ஓட்டி செல்கிறார். அதுவும் மிக குறைவான வேகத்தில். அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மணிக்கு 16 மைல் வேகத்திலேயே தெருக்களில் காரை செலுத்துகிறார்.

அவர் கார் ஓட்டுவதற்கு முன்பு, மந்திரமும் கூறி கொள்கிறார். நாம் செய்வதிலேயே மிக ஆபத்து நிறைந்த விசயம் வாகனம் ஓட்டுவது என்பதே அந்த மந்திரம்.

இவர், தன்னுடைய டீன்-ஏஜ் மகனிடம் இருந்து ரத்த பரிமாற்றமும் செய்து உள்ளார். தினசரி உடலில் உள்ள கொழுப்பு அளவை அறிகிறார். ஸ்கேன், எம்.ஆர்.ஐ. என 30 டாக்டர்கள் கொண்ட குழுவினர் அவரை பராமரித்து வருகின்றனர். கொலாஜன், கிரியேட்டின் போன்ற பொருட்கள் அடங்கிய உணவுடன் அன்றைய நாளை அவர் தொடங்குகிறார்.

இதனால், தனது வயது முதிர்வை குறைத்து 18 வயது வாலிபர் போன்று இளமையாக காட்சியளிப்பதற்கான வழிகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இது எந்த அளவுக்கு பயனளிக்கும் என வருங்காலங்களிலேயே தெரிய வரும்.


Next Story