75-வது சுதந்திர தினம்: உலக தலைவர்கள் வாழ்த்து


75-வது சுதந்திர தினம்: உலக தலைவர்கள் வாழ்த்து
x

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உலக தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், "மகாத்மா காந்தியின் வாய்மை மற்றும் அகிம்சை என இரு கோட்பாடுகளின் வழியில் விடுதலை அடைந்த இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு, அமெரிக்காவும் இந்தியாவும் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன. விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை பாதுகாக்க, சுதந்திரமான இந்தோ-பசிபிக் முன்னேற்றம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இரு ஜனநாயக நாடுகளும் தொடர்ந்து ஒன்றாக நிற்கும். இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு, இரு நாட்டு மக்களிடையே உள்ள ஆழமான பிணைப்பினால் மேலும் வலுப்பெற்றுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்சன் வாழ்த்து

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தபோது ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து இந்திய சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில், "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். சமீபத்தில் குஜராத் மற்றும் புதுடெல்லிக்கு எனது பயணத்தின் போது, நம் நாடுகளுக்கு இடையே உள்ள செழிப்பான வாழ்க்கை பாலத்தை நானே கண்டேன். அடுத்த 75 ஆண்டுகளில் இந்த பிணைப்புகள் மேலும் வலுப்பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "அன்புள்ள நண்பர் நரேந்திர மோடி மற்றும் அன்பான இந்திய மக்களே உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வியத்தகு சாதனைகளை நீங்கள் பெருமையுடன் கொண்டாடும்போது, பிரான்ஸ் எப்போதும் உங்கள் பக்கம் நிற்கும்" என தெரிவித்துள்ளார்.

அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது இந்திய பயணத்தின் இனிமையான நினைவுகளை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்துகளை கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "1947-ம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று, பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது புதிய சுதந்திரத்தின் சாகசத்தில் தன்னம்பிக்கையுடன் சேருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தபோது, அவரது அழைப்புக்கு இந்தியா எவ்வளவு ஆழமாகச் செவிமடுக்கும் என்று உலகம் நினைத்து பார்த்திருக்க முடியாது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தோற்றம் மற்றும் சுதந்திர இந்தியாவின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை" என்றார்.

மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அன்பான வாழ்த்துகள். இந்தியா சுதந்திரம், முன்னேற்றம் மற்றும் பன்முகத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story