சூரியனை விட பன்மடங்கு பெரிய கருந்துளை பூமியின் மிக அருகில்...


சூரியனை விட பன்மடங்கு பெரிய கருந்துளை பூமியின் மிக அருகில்...
x

பால்வெளி மண்டலத்தில் சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை ஒன்று பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துள்ளது.


வாஷிங்டன்,

நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்கள், விண்மீன்கள், விண்கற்கள் என ஆச்சரியமளிக்கும் பல விசயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் கருந்துளையும் அடங்கும்.

சில கருந்துளைகள் சூரியனை விட 5 முதல் 100 மடங்கு அதிக எடையை கொண்டிருக்கும். இவை ஸ்டெல்லார்-மாஸ் வகையை சார்ந்தவை. இந்த வகை கருந்துளைகள் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 10 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த முறை வானியல் நிபுணர்களின் பார்வைக்கு இந்த வகை கருந்துளைகள் வந்துள்ளன. பொதுவாக, கருந்துளைகள் அவற்றின் ஊடே ஒளியை கூட கடந்து செல்ல விடாது. ஏனெனில், இந்த கருந்துளைகளின் மையத்தில் ஒளி மற்றும் பொருட்கள் உள்வாங்கப்படும்.

அண்டவெளியின் வில்லனாக காணப்படும் இந்த கருந்துளையில் ஒன்று சமீபத்தில் பூமிக்கு மிக அருகே நெருங்கி வந்துள்ளது விஞ்ஞானிகளை தீவிர ஆராய்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதன் பரிணாமம் பற்றி புரிந்து கொள்ளும் ஆய்வுக்கு அவர்களை உட்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு பூமியை நெருங்கிய கருந்துளையை விட மூன்று மடங்கு மிக அருகே இந்த கருந்துளை நெருங்கி உள்ளது.

ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் கயியா விண்கலத்தில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்ததில் இருந்து இந்த கருந்துளை பற்றிய விவரங்களை ஆய்வு கழுவினர் கண்டறிந்து உள்ளனர் என வானியல் இயற்பியலாளரான கரீம் எல்-பாத்ரி கூறியுள்ளார்.

இதன் எடை சூரியனை விட 10 மடங்கு அதிகம் ஆகும். 1,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்து உள்ளது. (ஓர் ஒளி ஆண்டு என்பது 9.5 டிரில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும்.

இதற்காக விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலைநோக்கியை பயன்படுத்தி உள்ளனர். அதன் வழியே கருந்துளை மற்றும் அதன் துணை பொருளான சூரியனை ஒத்த நட்சத்திரம் ஒன்றின் இயக்கமும் ஆராயப்பட்டு உள்ளது.

சூரியனை எப்படி பூமி ஒரு குறிப்பிட்ட தொலைவில் சுற்றுகிறதோ, அதே தொலைவில் இந்த நட்சத்திரமும், கருந்துளையை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என அறியப்பட்டு உள்ளது.

இந்த கருந்துளையானது உருவாவதற்கு முன்பு ஒரு நட்சத்திரம் ஆக இருந்திருக்கும் என்றும் அது ஒரு சில மில்லியன் ஆண்டுகளே உயிரோட்டத்துடன் இருந்திருக்கும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.


Next Story