வெளிநாட்டு பட்டப்படிப்புக்கே நல்ல வேலை கிடைக்கும்... 80% இந்திய மாணவர்கள் நம்பிக்கை; ஆய்வில் தகவல்


வெளிநாட்டு பட்டப்படிப்புக்கே நல்ல வேலை கிடைக்கும்... 80% இந்திய மாணவர்கள் நம்பிக்கை; ஆய்வில் தகவல்
x

இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்கு செலவிடும் தொகை 2025-ம் ஆண்டுக்குள் ரூ.8.18 லட்சம் கோடியாக இருக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.


வாஷிங்டன்,


இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும், ஆங்கிலேய வழி கல்வியான மெக்காலே கல்வி திட்டமே நடைமுறையில் உள்ளது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவில் படித்து பட்டம் பெற்று, பின்னர் உள்நாட்டிலேயே வேலை வாய்ப்பு பெறுவதில் அதிக சிரமங்களை மாணவ மாணவிகள் சந்திக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சில காரணங்களால், இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது சமீப நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் கூட, உக்ரைன் போர் எதிரொலியாக இந்திய மாணவ சமூகத்தினர் சொந்த நாடு திரும்பும் எண்ணிக்கையும் அதிகரித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.3 முதல் ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களில் 57 சதவீதத்தினர், வெளிநாட்டு கல்விக்கு செலவழிக்க முன்வந்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி லீப்-இப்சோஸ் அமைப்பின் வெளிநாட்டு படிப்பு பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் துணை நிறுவனர் வைபவ் சிங் கூறும்போது, இந்திய மாணவ சமூகத்தினர் இடையே கொழுந்து விட்டு வளர்ந்து வரும் ஆர்வங்களால் இந்திய வெளிநாட்டு கல்வி சந்தை நன்றாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.




2025-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க செல்வார்கள். இதற்கான சர்வதேச கல்வி செலவு, ரூ.8 லட்சத்து 18 ஆயிரத்து 955 கோடியாக (ரூ.8.18 லட்சம் கோடி) இருக்கும். இது ஒரு பெரிய சந்தர்ப்பம் என்றும் இந்த பிரிவில் தேவை அதிகரித்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையின்படி, வெளிநாட்டு பட்டப்படிப்புகள் தங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என 83 சதவீத இந்திய மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவில் இணைப்பு பெறுவதற்கான நிலையால், முதல் மொழியாக ஆங்கிலம் அல்லாத நாடுகளை 42 சதவீத இந்திய மாணவர்கள் தங்களது விருப்ப தேர்வாக கொண்டுள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.




இதனால், தங்களது விருப்ப தேர்வை மாணவர்கள் விரிவாக்கி கொண்டுள்ளதுடன், வெளிநாட்டு கல்வியை தேர்வு செய்வதில் தங்களை எளிதில் மாற்றி கொள்ள கூடிய வகையிலான நெகிழ்வு தன்மையுடன் அவர்கள் உள்ளதும் பிரதிபலிக்கப்படுகிறது.

இந்த தேர்ந்தெடுப்புக்கு காரணங்களாக, பல்கலை கழகத்தில் தரவரிசை பெறுதல், கல்வி உதவி தொகை பெறுவது, வெளிநாட்டு வாழ்க்கைக்கான செலவு உள்பட பல விசயங்களை அவர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டவர்களில் 3-ல் இரண்டு பங்கினர் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். 34 சதவீதத்தினர் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 62 சதவீத இந்திய மாணவர்கள் கல்வி கடன் பெறவும், 53 சதவீத இந்திய மாணவர்கள் கல்வி உதவி தொகைபெறவும் முயற்சிக்கின்றனர்.

இந்த வெளிநாட்டு கல்வியில் ஆர்வமுடன் உள்ளவர்களில் 60 சதவீதத்தினர் ஆண்களாகவும், 39 சதவீதத்தினர் பெண்களாகவும் உள்ளனர். 2 சதவீதத்தினர் தங்களுடைய பாலினம் பற்றி தெரிவிக்க விரும்பவில்லை. இதனால், வெளிநாட்டு மோகம் என்பது கல்வி வடிவிலும், நாளைய தூண்களான இன்றைய மாணவர்களிடையே மறைமுக தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.


Next Story