மனிதர்களிடம் இருந்து நாய்க்கு பரவிய குரங்கு அம்மை- உலக சுகாதார அமைப்பு அதிரடி எச்சரிக்கை


மனிதர்களிடம் இருந்து நாய்க்கு பரவிய குரங்கு அம்மை- உலக சுகாதார அமைப்பு அதிரடி எச்சரிக்கை
x

Image Courtesy: PTI

முதல் முறையாக மனிதர்களிடம் இருந்து நாய்க்கு குரங்கு அம்மை பரவியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா,

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. உலக முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்களிடம் இருந்து முதல் முறையாக நாய்க்கு குரங்கு அம்மை பரவியது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பாரிஸில் வாழும் ஒரு நபரிடம் இருந்து அவரது செல்லப்பிராணி நாய்க்கு குரங்கு அம்மை பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "இது மனிதர்களிடமிருந்து விலங்குக்கு பரவும் முதல் வழக்கு. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது.

1 More update

Next Story