அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில் கோபமடைந்த அரசர் 3-ம் சார்லஸ்; வைரலான வீடியோ


அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில் கோபமடைந்த அரசர் 3-ம் சார்லஸ்; வைரலான வீடியோ
x

அரசராக அதிகாரப்பூர்வ முறையில் அறிவிக்கும் நிகழ்ச்சியில் மேஜையை தூய்மை செய்ய பணியாளர்களிடம் அரசர் 3-ம் சார்லஸ் கோபமுடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.



லண்டன்,



இங்கிலாந்து நாட்டின் ராணியாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1952-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ராணியாக இருந்தவர் கடந்த வியாழ கிழமை உடல்நல குறைவால் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3-ம் சார்லஸ் (வயது 73) அறிவிக்கப்பட்டார்.

சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். அவர் முறைப்படி அரசராக பொறுப்பேற்று கொண்டார். இதேபோன்று, ஆஸ்திரேலியாவின் தலைவராக அரசர் 3-ம் சார்லஸ் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்து அரசராக 3-ம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்ட நிலையில், அவரை பற்றி அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டரில் வெளியான வீடியோ ஒன்றால் அவர் பிரபலமடைந்து வருகிறார்.

சமீபத்தில் இதுபற்றிய வீடியோ ஒன்றில், அவரை கோபமடைய செய்த நிகழ்வுகள் பற்றிய காட்சிகள் வெளிவந்து வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில், 3-ம் சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும் நிகழ்வின்போது, ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு, அந்த மேஜையை தூய்மைப்படுத்தும்படி பணியாளர்களுக்கு சமிக்ஞை காட்டுகிறார். இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளன.

எனினும், இதனை அரசர் கோபப்பட்டு விட்டார் என நினைத்து விட்டனர். ஒரு சிலர் நகைச்சுவையான நிகழ்வாக இதனை எடுத்து கொண்டுள்ளனர். ஒரு சிலர் இது சரியான செயலே என தெரிவித்து உள்ளனர். இதன்படி ஒருவர், அரசர் தனது ஆவணங்களை வைப்பதற்கு சிறிதளவே இடம் உள்ளது. போதிய இடம் இருக்கிறது என்பது ஊழியர்களாலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.




Next Story