உக்ரைன் போர் விவகாரம்: ஐ.நா.வில் ரஷியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது


உக்ரைன் போர் விவகாரம்: ஐ.நா.வில் ரஷியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது
x

உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது. பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்தன.

இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ரஷியாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது நாளை (புதன்கிழமை) வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷியா ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைத்தது.

ரஷியாவின் இந்த கோரிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா உட்பட 107 ஐ.நா. உறுப்பு நாடுகள் ரஷியாவுக்கு எதிராக வாக்களித்தன. இதனால் ரஷியாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


Next Story