கவுதமாலா அதிபர் தேர்தலில் அரேவலோ அமோக வெற்றி- ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்


கவுதமாலா அதிபர் தேர்தலில் அரேவலோ அமோக வெற்றி- ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்
x

முதல் சுற்று தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் யாருக்கும் வெற்றி பெற தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை.

கவுதமாலா,

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா நாட்டில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 160 பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள், 340 நகராட்சிகளின் மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள், மத்திய அமெரிக்க பாராளுமன்றத்தின் 20 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போதைய அதிபர் அலெஜாண்ட்ரோ ஜியாமத்தேய் இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்கு அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்யப்பட்டார்.

எனினும் இந்த தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் யாருக்கும் வெற்றி பெற தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் நேற்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. முதல் சுற்று தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த முற்போக்கு மூவிமியன்டோ செமில்லா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பெர்னார்டோ அரேவலோ மற்றும் பழமைவாத கட்சியான நம்பிக்கையின் தேசிய ஒற்றுமை கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் சாண்ட்ரா டோரஸ் ஆகியோருக்கு இடையே போட்டி நடந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அரேவலோ கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஊழலுக்கு எதிரான போராளியாக அறியப்படும் அரேவலோ வெற்றி பெற்றதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரேவலோவின் வெற்றி நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று மக்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெற்றி பெற்ற அரேவலோவுக்கு தற்போதைய அதிபர் அலேஜாண்ட்ரோ ஜியாமத்தேய் வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) பதிவிட்டுள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் தொடர்பான சான்றிதழ் வழங்கப்பட்ட மறுநாள் அதிகாரப்பூர்வமான பதவியேற்புக்கு அழைப்பு விடுத்தார்.


Next Story