அர்ஜென்டினாவில் ஏ.சி.யில் இருந்து பரவும் லெஜியோனேயர்ஸ் நோய் தாக்கி 4 பேர் பலி!


அர்ஜென்டினாவில் ஏ.சி.யில் இருந்து பரவும் லெஜியோனேயர்ஸ் நோய் தாக்கி 4 பேர் பலி!
x

நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பியூனஸ் அயர்ஸ்[அர்ஜென்டினா],

அர்ஜென்டினா நாட்டில் லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் நான்கு பேர் லெஜியோனேயர்ஸ் நோயால் இறந்தனர்.

லெஜியோனேயர்ஸ் நோய் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிரமான நிமோனியா (நுரையீரல் தொற்று) ஆகும். இந்த நோய் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு அமெரிக்க நகரமான பிலடெல்பியாவில் நடந்த அமெரிக்க படைவீரர்(லெஜியோன்ஸ்) குழுவின் கூட்டத்தில் தோன்றியது.

லெஜியோனெல்லா பாக்டீரியா கொண்ட சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும்போது அல்லது லெஜியோனெல்லா கொண்ட தண்ணீரை தற்செயலாக விழுங்கும்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு மக்கள் நோய்வாய்ப்படலாம்.

இந்த பாக்டீரியா அசுத்தமான நீர் அல்லது அசுத்தமான ஏர் கண்டிஷனிங் அமைப்புகளில் இருந்து உருவாகி பரவும்.

கடந்த திங்கட்கிழமை முதல் பதிவான இந்த இறப்புகள் அனைத்தும், சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே கிளினிக்கில் நிகழ்ந்தன. அந்த கிளினிக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 70 வயது பெண் ஒருவரும் பலியானார். 48 வயதான ஒரு நபர் நேற்று இறந்தார்.

மேலும் 7 பேருக்கு இந்நோயின் தாக்கம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. அதில் கிட்டத்தட்ட பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் அந்த கிளினிக் பணியாளர்கள் ஆவர்.

டுகுமான் நகரில் காய்ச்சல் பாதிப்புடன் வந்தவர்களுக்கு முதலில் கொரோனா, சளி மற்றும் ஹான்டா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்த பாதிப்பு இல்லை. அதன்பின், நடத்திய பரிசோதனையில் லெஜியோனெல்லா பாக்டீரியா தொற்று உறுதியானது.

லெஜியோனேயர்ஸ் நோயால் அந்த நால்வருக்கும் கடும் நிமோனியா ஏற்பட்டதாக தெரிகிறது. நோயாளிகளுக்கு அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவமனை பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் என்று சுகாதார மந்திரி கார்லா விசோட்டி செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த புதன்கிழமை, மாகாண சுகாதார மந்திரி லூயிஸ் மெடினா ரூயிஸ் கூறுகையில், இந்த நோய் தொற்றில், நச்சு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் நிராகரிக்க முடியாதவை. அந்த மருத்துவமனையில் உள்ள ஏ.சி மற்றும் சீதோஷண கட்டுப்பாட்டு கருவிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்றார்.

டுகுமான் மாகாண மருத்துவக் கல்லூரியின் தலைவர் ஹெக்டர் சேல் கூறுகையில், இந்த பாக்டீரியா தொற்று தீவிரமாக உள்ளது. இந்த பாக்டீரியா தொற்று பொதுவாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொரு நபருக்கு பரவுவதில்லை. மேலும் பாதிக்கப்பட்ட 11 பேருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த எவருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று விவரித்தார்.


Next Story