ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை கொல்ல முயற்சி; துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பினார்


ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை கொல்ல முயற்சி; துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பினார்
x

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதர் உபைத்-உர்-ரஹ்மான் நிஜாமானியை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் உபைத்-உர்-ரஹ்மான் நிஜாமானி. இவர் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நிஜாமானியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனிருந்த அவரின் பாதுகாவலர் குறுக்கே பாய்ந்து, அவரை காப்பாற்றினார்.

இதில் நிஜாமானியின் பாதுகாவலர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை கொலை செய்யும் நோக்கத்தோடு தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஆப்கானிஸ்தான் தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு தாக்குதலுக்கான காரணமான நபர்களை நீதியின் முன் நிறுத்த ஆப்கானிஸ்தான் அரசை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story