பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் பயங்கர மோதல்.. 26 பேர் படுகொலை


பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் பயங்கர மோதல்.. 26 பேர் படுகொலை
x

மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலைகளிலும் ஆற்றங்கரையிலும் ஆங்காங்கே கிடந்தன.

பப்புவா நியூ கினியா,

ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ள பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் நேற்று பழங்குடியினரில் இரு பிரிவினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கினர். துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இந்த மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சண்டையில் 53 பேர் இறந்துவிட்டதாக கண்காணிப்பு அதிகாரி ஜார்ஜ் காகாஸ் ஆரம்பத்தில் கூறினார். பின்னர் களத்தில் இறங்கிய பாதுகாப்புப் படையினர், இறந்தவர்களின் எண்ணிக்கையை 26 ஆக குறைத்து தகவல் வெளியிட்டது.

மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலைகளிலும் ஆற்றங்கரையிலும் ஆங்காங்கே கிடந்தன. அந்த உடல்களை போலீசார் டிரக்குகளில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

2022 பொதுத்தேர்தலுக்கு பிறகு எங்கா மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ளது. தேர்தல் மோசடி மற்றும் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக நாடு முழுவதும் வன்முறை ஏற்பட்டுள்ளது. பழங்குடியினரிடையே சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டதாக எங்கா கவர்னர் பீட்டர் இபாடாஸ் தெரிவித்தார்.

பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். மேலும், பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story